இந்தியா கூட்டணியில் அதிமுக இணைகிறதா..? ட்விஸ்ட் வைத்த வைகைச்செல்வன்

Published On:

| By vivekanandhan

admk join with India alliance

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி உறுதியாக இருப்பதாக பேசப்பட்டு வந்த நிலையில், காங்கிரசை அதிமுக கூட்டணிக்கு அழைத்து பரபரப்பை உருவாக்கியுள்ளார் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் வைகைச்செல்வன்.

கலைஞர் நினைவு அருங்காட்சியகத்தின் திறப்பு விழாவில் காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லையே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வைகைச்செல்வன், “காங்கிரசுக்கும் திமுக கூட்டணிக்கும் இடையில் உள்ள கசப்புகள் இப்போது வெளிப்பட்டிருக்கிறது. அந்த கசப்புகளுக்கு உள்ள நல்ல மருந்து அதிமுகவிடம் இருக்கிறதென்று காங்கிரஸ் நம்பினால் விரைவில் நல்ல பதில் கிடைக்கும்.” என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

மேலும் செய்தியாளர்கள், “காங்கிரசுடன் கூட்டணி வைக்கத் தயாராக இருப்பதாக சொல்வதால் இந்தியா கூட்டணிக்குள் அதிமுக இணைவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், “இவையெல்லாம் குறித்து இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள்ளாக நல்ல பதில் கிடைக்கும்” என்று சஸ்பென்ஸ் வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.

ADVERTISEMENT

வைகைசெல்வனின் இந்த பேட்டி காங்கிரசுக்கு நேரடியாக விடுக்கப்பட்ட அழைப்பாகவே பார்க்கப்படுகிறது. ஏற்கனவே திமுகவுடனான காங்கிரசின் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை என்பது பல நாட்களாக முடிவை எட்டாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

திமுக கூட்டணியைப் பொறுத்தவரை காங்கிரசுக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகள் அளவுக்கு மீண்டும் வழங்குவதற்கு திமுக மேலிடம் தயாராக இல்லை என்றே திமுக வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. அதேசமயம் தமிழக காங்கிரசில் புதிய தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் செல்வப்பெருந்தகை, கடந்த முறை பெற்றதைவிட ஒரு சீட்டாவது அதிகம் பெற வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறார். அதிகம் பெற முடியவில்லையென்றாலும் கூட 9 இடங்களில் ஒன்று கூட குறைந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம். புதிதாக தலைமைப் பதவியை ஏற்ற பிறகு தொகுதிப் பங்கீட்டில் காங்கிரசுக்கான எண்ணிக்கை ஏதேனும் குறைந்தால், அவரது தலைமைத்துவத்தின் மீது கேள்விகள் எழுப்பப்பட்டுவிடும் என்பதால் 9 தொகுதிகளை எப்படியாவது மீண்டும் பெற்றுவிட வேண்டும் என்று கணக்கு போட்டு வேலை பார்த்து வருகிறாராம் செல்வப்பெருந்தகை.

ADVERTISEMENT

ஆனால் திமுக தலைமையிலிருந்து இன்னும் 9 தொகுதிகள் தருவதற்கு முன்வராத நிலையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கும் காங்கிரசுக்கு கொடுக்கும் தொகுதிகளிலிருந்து பிரித்துக் கொடுக்குமாறு பேசப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் திமுக-காங்கிரஸ் பேச்சுவார்த்தையில் சிக்கல்கள் நீடிப்பதாக அரசியல் வட்டாரங்களில் கவனிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதிமுகவிலிருந்து காங்கிரசுக்கு நேரடியாக அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது பல சலசலப்புகளை உருவாக்கியுள்ளது.

அருங்காட்சியகத்தின் திறப்பு விழாவில் காங்கிரஸ் கலந்துகொள்ள வில்லையா?

கலைஞர் நினைவு அருங்காட்சியகத்தின் திறப்பு விழாவில் காங்கிரஸ் கலந்துகொள்ள வில்லையா என காங்கிரஸ் தரப்பில் விசாரித்த போது, அது தவறான செய்தி என்றும் கட்சியின் சார்பாக கே.வி.தங்கபாலு மற்றும் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கலந்துகொண்டதாகவும் தெரிவித்தனர்.

மேலும் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, “திமுக-காங்கிரஸ் கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை. ஊடகங்களும், பத்திரிக்கைகளும் தவறாக கருத்துகளை சித்தரித்து பதிவு செய்கிறார்கள். யூகங்களின் அடிப்படையில் பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செய்திகளை வெளியிட்டு குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம். ராகுலும் ஸ்டாலினும் உடன்பிறவா சகோதரர்கள். அதைப் பிரிக்க வேண்டாம்” என்று கூட்டணி குறித்த சர்ச்சைகளுக்கு முடிவுகட்டும் வகையில் பேசியிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-விவேகானந்தன்

தருமபுரம் ஆதினத்துக்கு மிரட்டல்… திமுக நிர்வாகிக்கு தொடர்பா?

‘GOAT’, ‘புஷ்பா 2’ படங்களை ‘கைப்பற்றிய’ ஓடிடி நிறுவனம்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share