கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று (ஆகஸ்ட் 17) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி பணியில் இருந்த பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக சஞ்சய் சாய் என்ற நபர் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.
பெண் மருத்துவரின் படுகொலையை கண்டித்து மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களும் போராட்டங்கள் நடைபெற்றன.
இதற்கிடையே, “கொல்கத்தாவில் பெண் மருத்துவரின் கொலையை கண்டித்து, ஆகஸ்ட் 17ஆம் தேதி காலை 6 மணி முதல் 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தை நாடு முழுவதும் மருத்துவர்கள் மேற்கொள்வார்கள்” என்று இந்திய மருத்துவ சங்கம் அறிவித்தது. அவசர சிகிச்சை மட்டும் வழக்கம்போல் செயல்படும் என்று தெரிவித்தது.
அதன்படி இன்று காலை முதல் மருத்துவர்கள் வேலை நிறுத்தட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் போராட்டம் நடந்து வருகிறது.
சேலத்தில், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை ஒரு மணி நேரம் அனைத்து பிரிவு புற நோயாளிகள் சிகிச்சையையும் புறக்கணித்தனர். சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் 2000க்கும் மேற்பட்டோர் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஸ்டான்லி மருத்துவமனை பெண் மருத்துவர்கள் கூறுகையில், “கொல்கத்தா பெண் மருத்துவரை கொலை செய்தவர்களை கண்டுபிடித்து உடனடியாக தண்டிக்க வேண்டும். மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும் அவசர பிரிவில் சிகிச்சை அளித்து வருகிறோம். மருத்துவமனை என்றால் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால் 6 மணிக்கு மேல் இங்கு இருக்க பயமாக இருக்கிறது. எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். சாப்பிடுவதற்கு கூட மருத்துவமனையில் இடமில்லை. நோயாளியை பார்க்கும் இடத்திலேயே சாப்பிடுகிறோம். ஒரு அடிப்படை தேவைகள் கூட செய்துதரப்படவில்லை ” என்று கூறினர்.
அவர்கள், no safety… no duty, மருத்துவர்களுக்கு பாதுகாப்பு தேவை உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அமைதி பேரணியிலும் ஈடுபட்டனர்.
சென்னை ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள மருத்துவர்கள், ‘எங்களுடைய வெள்ளை அங்கி சிவப்பாகும் போது இச்சமுதாயம் இருண்டுவிடும்’ , ‘பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்துங்கள்’, ‘நோயாளியை காப்பாற்ற நாங்கள் இருக்கிறோம், எங்களை காப்பாற்ற யார் இருக்கிறார்கள்’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கொல்கத்தா பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு வருகின்றனர்.
கோவை அரசு மருத்துவமனையில் உரிய பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்த வலியுறுத்தி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து, பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மருத்துவர்களும், ஈரோட்டில் 2000க்கும் மேற்பட்ட மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, திருச்சி என பல இடங்களிலும் போராட்டம் நடந்து வருவதால் நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பாட்னா எய்ம்ஸ், திருவனந்தபுரம் அரசு மருத்துவமனை, அம்ரிஸ்தரில் உள்ள பஞ்சாப் அரசு மருத்துவமனை, மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரி, டெல்லி ஆர்எம்எஸ் மருத்துவமனை மருத்துவர்கள் என நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
மருத்துவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள பாஜகவைச் சேர்ந்த முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “பெண் மருத்துவர்களை சிதைப்பது தாயை சிதைப்பதற்கு சமம்…. தாய் உயிர் கொடுக்கிறார்….. மருத்துவர் உயிர் காக்கிறார்…..
சிதைக்கும் மிருகங்களே இதை சிந்தித்துப் பாருங்கள்…கொல்கத்தாவில் சிதைக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கிடைக்க திரண்டிருக்கும் மருத்துவர்களின் உணர்வோடு நானும் உடனிருக்கிறேன்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
ஆவணி மாத நட்சத்திர பலன்: மிருகசீரிஷம் (17.8.2024 முதல் 16.9.2024 வரை)