எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகம் சார்பாக நடக்கும் சிறப்புப் பட்டமளிப்பு விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ் நாத்சிங் வழங்குகிறார். இதற்கான விழா வரும் டிசம்பர் 28 ஆம் தேதி சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் இருக்கும் எஸ்.ஆர். எம். பல்கலைக் கழகத்தில் நடைபெறுகிறது.
திமுகவின் உதயசூரியன் சின்னம் சார்பில் பெரம்பலூர் தொகுதியில் நின்று வெற்றிபெற்றிருக்கிற எஸ்.ஆர். எம். பல்கலை வேந்தரான பாரிவேந்தர், இந்த விழாவுக்கு பிரதமர் மோடிக்கு நெருக்கமான மத்திய அமைச்சர் ராஜ் நாத் சிங்கை அழைத்திருப்பது அரசியல் ரீதியாக கவனிக்கப்படுகிறது.
இதேநேரம் இந்த விழாவுக்கான அழைப்பிதழை தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ள பின்னணிப் பாடகி சின்மயி, தனது கடுமையான கருத்துகளை வைரமுத்து மீது பதிவு செய்துள்ளார். பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகளைப் பற்றி மனம் திறந்து சொல்லும் மி டூ என்ற ஹேஷ்டாக் இந்தியாவில் கடந்த ஆண்டு பிரபலமானபோது, வைரமுத்து மீது பாலியல் புகார்களை அடுக்கினார் சின்மயி.
இந்நிலையில் இந்த விழா குறித்து கருத்து தெரிவித்திருக்கும் அவர், “இதுவரை ஒன்பது பெண்கள் யார் மீது பாலியல் புகார் கூறியிருக்கிறார்களோ அவருக்கு கௌரவ பட்டம் வழங்க வருகிறார் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர். பெண்களை துன்புறுத்துபவர்களுக்கு எந்த சேதமும் ஏற்படாது. அதற்கு பதிலாக நான் வேலை செய்வதற்குத்தான் தடை விதிக்கப்பட்டது.

இந்த முனைவர் பட்டம் மொழியில் நிரூபிக்கப்பட்ட அவரது திறமைக்காக என்று எனக்குத் தெரியும். அதேநேரம் பெண்களை தொடர் துன்புறுத்துவதிலும் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கலாம்.
எஸ்.ஆர். எம். பல்கலைக் கழகத்தாரே… உங்கள் மாணவர்களுக்கு இவரை விட சிறந்த ரோல் மாடலை நீங்கள் தேர்வு செய்திருக்க முடியாது
நான் புகார் கூறியதற்குப் பிறகு வைரமுத்து பெரிய நடிகர்களின் படங்களில் பணியாற்றியுள்ளார். உலகம் முழுவதும் பயணம் செய்தார், அரசியல் மற்றும் கலையுலகில் பெரியவர்களுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டார். ஆனால் என் புகாரை புகாரை விசாரிக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. நல்ல நாடு நல்ல மனிதர்கள்” என்று தொடர் ட்விட்டுகளில் சீறியுள்ளார் சின்மயி.
