பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் முன்னாள் தேசிய தலைவரும் மருத்துவருமான டாக்டர் சுப்பையா இன்று மார்ச் 19 சென்னை ஆதம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாடு கொரோனா ஊரடங்கில் தத்தளித்துக் கொண்டிருந்த போது, சமூக தளங்களில் சர்ச்சைக்கு உள்ளானார் டாக்டர் சுப்பையா.
சென்னை நங்கநல்லூரில் உள்ள ஒரு அப்பார்ட்மெணடில் சுப்பையா வசித்து வந்தார். தனது காரை அதே அபார்ட்மெண்டில் வசிக்கும் ஒரு மூதாட்டியின் இடத்தில் பார்க் செய்வது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில், அந்த மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்துவிட்டு சென்றார் டாக்டர் சுப்பையா. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த பிரச்சினை தொடர்பாக அந்த மூதாட்டி போலீசில் புகார் கொடுக்க டாக்டர் சுப்பையா மீது 3 பிரிவுகளின் கீழ் ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அந்தப் பெண்மணி அப்போது அரசியல் அழுத்தங்களால் புகாரை திரும்பப் பெற்றுக் கொள்வதாக கூறினார். ஆனால் தேசிய மாணவர் சங்கம் இந்த பிரச்சினையை கையில் எடுத்து சுப்பையா மீது நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்திய நிலையில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் தஞ்சை மாவட்டத்தில் மாணவி ஒருவர் கிறிஸ்தவ மதத்திற்கு கட்டாய மாற்றம் செய்யப்பட்டதாக பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பினர் சென்னை சித்தரஞ்சன் சாலையில் இருக்கும் முதல்வரின் வீட்டை முற்றுகையிட்டனர். அதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு அரசு பணியில் இருந்துகொண்டே டாக்டர் சுப்பையா உதவியதாக புகாரின் பேரில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை புற்றுநோய் பிரிவு தலைவராக செயல்பட்டு வந்த சுப்பையாவை சமீபத்தில் பணி இடைநீக்கம் செய்தது தமிழக அரசு.
இந்த நிலையில் 2020 சம்பவத்தின் அடிப்படையில் டாக்டர் சுப்பையா இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
**வேந்தன்**