நெல்லின் வெளிப்புறத் தோலை நீக்கிய பிறகு, மிதமான பழுப்பு நிறத்திலிருக்கும் அரிசியை, ‘பழுப்பு அரிசி’ (Brown Rice) என்கிறோம். முன்பெல்லாம் நெல்லை உரலில் போட்டுக் குத்தி, தோலை நீக்குவார்கள். அதனால் ‘கைக்குத்தல் அரிசி’ என்ற பெயர் வந்தது. இப்போது பிரத்யேக எந்திரங்கள் மூலம் உமியை நீக்கி, பாலிஷ் செய்து வெள்ளை அரிசியாகக் கடைகளில் விற்பனை செய்கிறார்கள். இரண்டும் அரிசிதான் என்றாலும், பழுப்பு அரிசியிலும் வெள்ளை அரிசியிலும் இருக்கும் சத்துகளின் அளவு ஒன்றுக்கொன்று வேறுபட்டவை. do you know brown rice benefits
பழுப்பு அரிசியில் வைட்டமின் சி தவிர, அனைத்து வைட்டமின் சத்துகளும் அடங்கியுள்ளன. ஆனால், பாலிஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசியில் இந்தச் சத்துகள் எவையும் இருக்காது. 100 கிராம் பழுப்பு அரிசியில் 6.7 கிராம் புரதச்சத்து இருக்கிறது. வெள்ளை அரிசியில் 0.7 கிராம் மட்டுமே இருக்கிறது. பழுப்பு அரிசியில் 0.6 கிராம் இ நார்ச்சத்து இருக்கிறது. ஆனால், வெள்ளை அரிசியில் மூன்று மடங்கு குறைவாக அதாவது 0.2 கிராம் மட்டுமே இருக்கிறது.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைச் சீராக வைத்திருக்க உதவும் இரும்புச்சத்து, பழுப்பு அரிசியில் 3.2 கிராமும், வெள்ளை அரிசியில் வெறும் 0.7 கிராமும் இருக்கிறது.
உடலி்லிருக்கும் நல்ல கொழுப்பு செரிமானத்தை எளிதாக்கி, உடல் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வழிவகுக்கும். அத்தகைய நல்ல கொழுப்பு, வெள்ளை அரிசியைவிட பழுப்பு அரிசியில் 50 சதவிகிதம் அதிகமாக காணப்படுகிறது.
மேலும், நார்ச்சத்து, வைட்டமின் சத்துகள் அதிகமாக இருப்பதால், பழுப்பு அரிசி செரிமானத்தை எளிதாக்கும். மலக்குடல் புற்றுநோய் வருவதைத் தடுக்கும். ஒரு காலத்தில் நாம் அனைவருமே கைக்குத்தல் முறையில் உருவான பழுப்பு அரிசியைத்தான் சாப்பிட்டு வந்தோம். ஆனால், காலம் நம்மையெல்லாம் வெள்ளை அரிசிக்கு மாற்றிவிட்டது. ‘மல்லிகைப்பூப்போல சாதம் இருக்க வேண்டும்’ என்று வெள்ளை அரிசியையே பயன்படுத்துகிறோம். அதனால் அரிசியிலிருக்கும் ஊட்டச்சத்துகளை இழந்ததுடன், நோய்களுக்கும் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம். இனியாவது பழுப்பு அரிசிக்கு பழகுவோமா?