வயிறு முட்டி, சிறுநீர் கழித்தே தீர வேண்டும் என்கிற நிலை ஏற்படும் வரை சிலர் சிறுநீர் கழிப்பதைப் பற்றி யோசிக்க மாட்டார்கள். சிறுநீர் கழிப்பதை எல்லாம் ஒரு பொருட்டாக நினைக்க மாட்டார்கள்.
எல்லா வேலையும் முடிந்த பிறகு செய்ய வேண்டிய கடைசி வேலையாகத்தான் நினைப்பார்கள்.
இது மிகவும் ஆபத்தான பழக்கம் என்பது தெரியாமல் இருக்கின்றனர்.
பொதுவாக ஐந்து முதல் பத்து வயதுள்ள சிறுவர்களால் 100-150 மில்லி சிறுநீரை சேமிக்க முடியும். உடல் வளர்ச்சி அதிகமாக, சிறுநீர்ப்பையில் சிறுநீரின் கொள்ளளவும் அதிகரிக்கும்.
22-25 வயதில் சிறுநீர்ப்பையின் வளர்ச்சி நின்று விடும். இந்த வயதில் சராசரியாக 350-400 மில்லி சிறுநீரை சிறுநீர்ப்பை தேக்கிவைக்கும். சிறுநீர் கழிக்காமல் அடக்கிவைத்தால், சிறுநீர்ப்பை விரிவடைந்து கொண்டே செல்லும்.
பல மணி நேரங்கள் அடக்கி வைத்து சிறுநீர் கழிப்பவர்களுக்கு சிறுநீர் முழுவதுமாக வெளியேறாது. விட்டு விட்டுத்தான் வெளியேறும். இதே பழக்கம் தொடர்ந்தால், சிறுநீர்ப் பையின் சுருங்கி விரியும் தன்மை குறைந்துவிடக்கூடும்.
சிறுநீரை அடக்குவதால், சிறுநீரில் உள்ள உப்பு படிமம் சிறு சிறு படிவங்களாக சேர்ந்து கற்களை உருவாக்கும். பிறகு, இந்தக் கற்கள் சிறுநீர்ப் பாதையை அடைத்துக் கொள்ளும்.
பொதுவாக, வயதானவர்கள், சிறுநீரை அடக்குவர். இதனால், புராஸ்டேட் சுரப்பியில் தொற்று காரணமாக வீக்கம் (Prostatitis) ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த வீக்கத்தால் இவர்களுக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றினாலும், முழுதாக சிறுநீர் வெளியேறாது. 10 நிமிடங்களுக்கு ஒருமுறை சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றும். அரிதாக, இந்த வீக்கம் மலக்குடலையும் பாதிக்க வாய்ப்புள்ளது.
சிறுநீரை அடக்குவதில் ஆண்களைக் காட்டிலும் பெண்களில்தான் அதிகம் பேர் உள்ளனர். பயணங்களின்போது, பெண்கள் சிறுநீரை வெளியேற்ற கழிப்பறைகள் இல்லாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
இதனால் பெண்களுக்கு சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படும் வாய்ப்பு உண்டாகும். சிறுநீர் வருமோ என்று குறைவாக நீர் அருந்தும்போது, நீர் வறட்சி (Dehydration), சோர்வு, தலைவலி, சருமப் பிரச்னைகள், உடல் உஷ்ணம் ஆகிய பிரச்னைகள் ஏற்படும்.
எனவே, இயற்கைக் கழிவுகளை அடக்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டும். சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வந்த உடனே, கழித்துவிட வேண்டியது அவசியம்.
சுகாதாரம் காரணமாக பலரும் இயற்கைக் கழிவை சில சமயங்களில் அடக்குகின்றனர். இதனால், கைகளில் எப்போதும் டிஸ்யூ, ஹேண்ட் வாஷ், கிளவுஸ் உள்ளிட்டவை வைத்திருந்தால், பொதுக் கழிப்பறையைப் பயன்படுத்த சுலபமாக இருக்கும்.
சிறுநீர் வெளியேற்றுவதில் கூச்சம் தேவை இல்லை. இயற்கையைத் தடுத்து நிறுத்துவது உடலுக்கு நீங்கள் செய்யும் தீங்கு என்பதை மனதில் நிறுத்துங்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: நட்ஸ் பர்கர்!
டிஜிட்டல் திண்ணை: விக்கிரவாண்டி… பொன்முடிக்கு ஸ்டாலின் வைத்த ட்விஸ்ட்!
ரீ ரிலீஸாகும் கமல்ஹாசனின் குணா!
மோடி 3.0 அமைச்சரவையில் நிரம்பி வழியும் வாரிசுகள் : ராகுல் விமர்சனம்!