வனவிலங்குகளுக்கு இடையூறு: வனத்துறை எச்சரிக்கை!

Published On:

| By admin

வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வாகன ஓட்டிகள் மீது அபராதம் விதிக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் 1,435 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இது கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி தமிழகத்தின் நான்காவது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இங்கு யானைகள், புலிகள், சிறுத்தைகள், கரடிகள், செந்நாய்கள், புள்ளிமான்கள், கழுத்தை புலிகள் என ஆயிரக்கணக்கான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அண்மையில் நடந்த கணக்கெடுப்பில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 1,200-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஊட்டி, கொடைக்கானல் போல இதமான கால நிலை இங்கு நிலவுவதால் திம்பம், ஆசனூர் கேர்மாளம் வனச் சாலையில் ஆயிரக்கணக்கானோர் முகாமிட்டு இயற்கையின் அழகை பலர் ரசிப்பார்கள். அப்போது சிலர் வாகனங்களை நிறுத்தி சாலையோரம் அதன் வாழ்விடத்தில் நடமாடும் யானை, மான் போன்ற விலங்குகளை புகைப்படம் எடுத்தும், சத்தமிட்டு்ம் வருகின்றனர். சில வாகன ஓட்டிகள் ஆர்வம் காரணமாக யானைகள் அருகே நின்று செல்ஃபி எடுக்கின்றனர். இதனால் யானை அவர்களை துரத்தி தாக்க முற்படுவதும் அவர்கள் தப்பிப்பதும் வாடிக்கையாகி விட்டது.

மேலும், ஆபத்தை உணராத இளைஞர்கள் சிலர் மலை உச்சியில் நின்று மலைகளின் பின்னணியில் செல்ஃபி எடுக்கின்றனர். சலசலவென ஓடும் நீரோடைகளில் உள்ள பாறைகள் மீது அமர்ந்து மது அருந்துவதும் எல்லையை மீறிய செயலாக காண முடிகிறது.

இந்த நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பக இணை கள இயக்குநர் கிருபா சங்கர், “இயற்கையான சூழல் கொண்ட விலங்குகள் வாழும் வாழ்விடத்தில் அத்துமீறி நுழைந்து இடையூறு ஏற்படுத்தும் வாகன ஓட்டிகள், சுற்றுலாப் பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மனிதர்களின் தேவையற்ற செயல்களால் விலங்குகள் மனிதர்களை தாக்க வாய்ப்புள்ளது. எனவே வனப்பகுதியில் அத்துமீறும் நபர்கள் மீது அபராதம் விதித்து வழக்கு பதிவு செய்யப்படும்” என்று எச்சரித்துள்ளார்

**-ராஜ்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share