சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில செயலாளர் வெங்கடேஷ் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி, பாதுகாப்பு வழங்க கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அவர் தனது மனுவில், “நான் ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்து வருகிறேன். கல்வி சார்ந்த அறக்கட்டளையை நடத்தி வருகிறேன். என்னுடைய உறவினர் ஒருவரை முத்துசரவணன் என்பவர் படுகொலை செய்தார். இந்த வழக்கில் முத்துசரவணன் என்கவுண்ட்டர் செய்யப்பட்டார்.
இந்த என்கவுண்ட்டருக்கு நான் காரணம் என்று சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவி வருகின்றன. இதனால் எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. எனவே எனக்கும், என் குடும்பத்துக்கும் உரிய பாதுகாப்பு வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (ஏப்ரல் 1) விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், “பாஜகவைச் சேர்ந்த வெங்கடேஷ் செம்மரக்கடத்தல், துப்பாக்கி வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்வது என பல சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டவர் என்பதால் இவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது” என்று தெரிவிக்கப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி, “மனுதாரர் தமிழகத்தில் உள்ள குற்றவழக்குகள் மட்டுமல்லாமல், ஆந்திராவில் செம்மரக் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளிலும் குற்றம்சாட்டப்பட்டவர். அவர் மீது 49 வழக்குகள் உள்ளன. சரித்திர குற்றவாளிகள் பதிவேட்டிலும் அவர் பெயர் உள்ளது. அதனால் அவருக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது.
அப்படி வழங்கினால் அது மக்களுக்கு நீதித்துறை மீது இருக்கும் நம்பிக்கையை இழக்கச் செய்யும். தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். பிறகு குற்றச் செயலில் ஈடுபடும் பலரும் பாதுகாப்பு கேட்கும் சூழல் ஏற்படும்” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
உங்களை சிறையில் வைத்தவர்களுடன் கூட்டணியா?: டிடிவி தினகரனுக்கு சீமான் கேள்வி!
Comments are closed.