உதகையில் மினி டைடல் பார்க்: அமைச்சர் தங்கம் தென்னரசு

Published On:

| By admin

தஞ்சாவூர் மாவட்டம் உதகையில் மினி டைடல் பார்க் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று(ஏப்ரல் 19) தொழில்துறை மற்றும் தமிழ் பண்பாடு தொல்லியல் துறையின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தைத் தொடர்ந்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், தொழில்துறை இனி, ‘தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை’ என பெயர் மாற்றம் செய்யப்படும்.

முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல் ஆணையரகம் உருவாக்கப்படும்.

விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சாலைகள் மேம்படுத்தப்படும்.

ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் பெரிய அளவில் முதலீடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு ஹைட்ரஜன் எரிசக்தி கொள்கை வெளியிடப்படும்.

சுற்றுச்சூழலின் தரத்தை மேம்படுத்த எத்தனால் கொள்கை 2022 வெளியிடப்படும்.

தமிழ்நாடு தொழில் கொள்கை 2021ன் கீழ் வழங்கப்படும் நிலையான ஊக்கச் சலுகைகளுடன் கூடுதலாகத் தொழில்நுட்ப ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தியை ஊக்குவிக்கும் சிறப்புத் திட்டம் வெளியிடப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய சிப்காட் தொழில் பூங்கா 1800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3,000 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் குருபரப்பள்ளி தொழிற் பூங்காக்களில் சுமார் 26 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும்.

ஓசூர் மற்றும் தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற் பூங்காக்களில் சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சரக்கு வாகன முனையங்கள் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.

ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழில் பூங்காவில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வணிக வளாகம் மற்றும் உணவகம் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.

தஞ்சாவூர் மற்றும் உதக மண்டலத்தில் சுமார் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மினி டைடல் பார்க் பூங்காக்கள் அமைக்கப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்துறை தொழில் பூங்கா ஒன்று தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொழிலக வீட்டுவசதி திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.

தமிழகத்தில் அதிவேக ரயில் வழித்தடத்தை அடையாளம் காண்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு சுமார் 3 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் பிரத்தியேக சரக்கு போக்குவரத்திற்கான வழித் தடத்தை அடையாளம் காண்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு 3 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்கள் தொடர்பாக ஒரு பொது வசதி மையம் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோயம்புத்தூரில் அமைக்கப்படும்.

விமானத்தை இயக்க பயிற்சி தரும் நிறுவனங்களை அமைக்க டிட்கோ துணை புரியும்.

கோயம்புத்தூரில் வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைக்காகத் தயாரிப்புக்கு பிந்தைய செயல்பாடுகளுக்கான அலகு ஒன்று 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

பிரத்தியேக பாதுகாப்பு பூங்காக்கள் சுமார் 50 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

கோயம்புத்தூரில் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்கா ஒன்று 300 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கும் கடன்களுக்கு 3 சதவிகிதம் முதல் 6 சதவிகிதம் வட்டி மானியம் மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து வழங்கப்படும்.

அரியலூர் புதிய சிமெண்ட் ஆலையில் மாற்று எரிபொருள் எரியூட்டும் அமைப்பு ஒன்று 30 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்.

அரியலூர் சிமெண்ட் ஆலையில 2.50 கோடி ரூபாய் செலவில் 10 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு உடைய ஒரு புதிய மூடும் வசதி கொண்ட நிலக்கரி கிடங்கு அமைக்கப்படும்.

ஆலங்குளம் சிமென்ட் ஆலை வளாகத்தில் மணிக்கு 80 மெட்ரிக் டன் அரவைத் திறன் கொண்ட ஒரு புதிய சிமெண்ட் அரவை இயந்திரம் ஒன்று அதற்குரிய கட்டமைப்பு வசதிகளுடன் 40 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share