”விமர்சகர்கள்தான் இதற்கு பதில் சொல்லணும்” – டிஎன்ஏ இயக்குனரின் ஆதங்கம்!

Published On:

| By uthay Padagalingam

dna director direct questions to movie reviewers

கடந்த வாரம் வெளியான ‘டிஎன்ஏ’ வெற்றி அடைந்திருப்பதில் அப்படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறது. அதனை வெளிப்படுத்துகிற வகையில், சமீபத்தில் ‘நன்றி தெரிவித்தல்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊடக உலகைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். dna director direct questions to movie reviewers

டிஎன்ஏவில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோர் பேசிய இந்த நிகழ்ச்சியில் எல்லோருக்கும் நன்றி தெரிவித்த இயக்குனர் நெல்சன் வெங்கடேசன், அப்படத்திற்கு விமர்சனங்கள் அனைத்தையும் தான் நேரடியாக வாசித்ததாக, கேட்டதாக, பார்த்ததாகத் தெரிவித்தார்.

விமர்சனங்களில் குறிப்பிடப்பட்ட குறைகளைச் சரிப்படுத்திக்கொண்டு, தனது அடுத்த படைப்பை மேம்படுத்தித் தர முயற்சிப்பதாகக் கூறினார்.

கூடவே, சினிமா என்ற சூழலமைப்பைச் சிறப்பானதாக மாற்ற விமர்சனங்கள் அவசியம் என்று குறிப்பிட்டார்.

’நிறைய நல்ல சினிமாக்கள் வரணும். அதை எல்லோரும் பார்க்கணும். நிறைய பணம் சம்பாதிக்கணும். சினிமா மூலமா மக்கள் பயனடையணும். அதை அங்கீகரிக்கிற வகையில் விமர்சனங்கள் இருக்கணும். அதில் இருக்கிற நிறை, குறைகளைப் பேசணும்’ என்று சொன்னவர், திரைப்படத் தயாரிப்பு சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல் விமர்சகர்கள், மக்கள் உட்பட அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே சினிமாவைச் சிறப்பான சூழலமைப்பாக மாற்ற முடியும் என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, ஒரு விமர்சனத்தின் பின்னிருக்கும் நோக்கம் என்ன என்று அவர் கேள்வி எழுப்பினார்.

’ஒரு விமர்சனம் என்பது நிறுவனம் சார்ந்ததா, தனிப்பட்ட மனிதரின் ரசனை சார்ந்ததா? நீங்கள் சொல்கிற ஸ்பாய்லரின் அளவுகோல் என்ன? அதனைத் தீர்மானிப்பது யார்? இப்படி ஒரு விமர்சனத்தின் பின்னிருக்கும் பல விஷயங்கள் குறித்து எனக்கு குழப்பம் ஏற்பட்டது’ என்று தெரிவித்தார்.

இதற்கு முன்னர் இயக்கிய மூன்று படங்களின் விமர்சனங்களைtஹ் தான் கவனிக்கவில்லை என்றும், இப்படத்திற்கான விமர்சனங்களைப் படித்து ஆராய்ந்ததாகவும் தெரிவித்தார்.

ஆங்கிலப் பத்திரிகைகள், தமிழ் பத்திரிகைகள், யூடியூப் தளங்கள் என்று ஒவ்வொன்றிலும் வெவ்வேறுபட்ட விமர்சனங்கள் வந்ததாகவும், சென்னை போன்ற நகரங்களைச் சாராதவர்களின் கருத்துகள் வேறுபட்டிருந்ததாகவும் கூறினார்.

‘இத்தனை பேருடைய விமர்சனங்களும் ஒருமித்த கருத்தாக இல்லை. அதையும் மீறி அந்த விமர்சனங்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம்.

நாங்கள் பாதி தூரம் வருகிறோம். நீங்கள் பாதி தூரம் வாருங்கள். இரண்டு பேரும் கைகுலுக்குவோம்.

எந்த கதை இந்த சினிமா சூழலமைப்புக்கு தேவை? அதனை எப்படி வழங்கினால் இந்த சினிமாவை ஒருபடி அடுத்தகட்டத்திற்கு நகர்த்த முடியும் என்பது குறித்து பேச, விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். அதன்படி எனது அடுத்த படம் இருக்குமென்று நினைக்கிறேன்’ என்று இந்த நிகழ்ச்சியில் பேசினார் நெல்சன் வெங்கடேசன். இவரது வேண்டுகோளுக்கு விமர்சகர்களில் சிலர் பதிலளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக, இனி இயக்குனர்களுடன் விமர்சகர்கள் ஒன்றாக இணைந்து பங்கேற்கிற விவாதங்களை யூடியூப் தளங்களில், தொலைக்காட்சிகளில் காண நேரிடலாம். அதற்கான வாய்ப்பு இதன் மூலமாகத் தென்பட்டிருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share