திமுகவின் 29 மாவட்டங்களின் 91 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த 1.30 லட்சம் இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்கும் வடக்கு மண்டல சந்திப்பு இன்று (டிசம்பர் 14) திருவண்ணாமலையில் நடைபெறுகிறது.
சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு மண்டலங்கள் தோறும் நடத்தப்படுகின்றன. திருவண்ணாமலையில் வடக்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்பு, 135 ஏக்கர் அளவிலான திடலில் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பில் பங்கேற்கும் அனைத்து நிர்வாகிகளுக்கும் போட்டோ மற்றும் பெயருடனான அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
29 திமுக மாவட்ட நிர்வாகிகளும் அமருவதற்கு தனித்தனியாக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. திமுகவின் மேற்கு, தெற்கு, டெல்டா மண்டலங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் தன்னார்வலர்களாக கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திமுகவின் வரலாற்றை விளக்கும் வரலாற்று புகைப்பட கண்காட்சியும் திமுகவின் முன்னோடிகள் பற்றிய புகைப்பட கண்காட்சியும் இந்த அரங்கில் இடம் பெறுகின்றன.
திமுக இளைஞர் அணியின் 45 ஆண்டு கால பயணத்தை விளக்கும் போட்டோ கண்காட்சியும் இங்கே அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் 27 புத்தகங்கள் அடங்கிய இளைஞர் அணியின் முத்தமிழறிஞர் பதிப்பக அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது . இந்த அரங்கத்தில் 10% தள்ளுபடி விலையில் புத்தகங்களைப் பெறலாம்.
மேலும் இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் 7 நொறுக்குத் தீனிகள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்படுகிறது.
தடையற்ற குடிநீர் விநியோகம், 1000-க்கும் மேற்பட்ட மொபைல் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
‘தொடரும் திராவிடம்’ என்ற நாடகம் அரங்கேற்றப்படுகிறது. இளைஞர் அணியின் பணிகள் மற்றும் திமுக வரலாறு குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா உரையாற்றுகிறார்.
இந்நிகழ்ச்சிக்கு துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், சிறப்புரையாற்றுகிறார்.
இது தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தமது எக்ஸ் பக்கத்தில், ”வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் கிளை-வார்டு-பாகங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் 1 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சந்திப்பு திருவண்ணாமலையில் மிக பிரமாண்டமான வகையில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாட்டு பணிகளை நேரில் பார்வையிட்டோம். வருகை தரும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து, தற்காலிக மருத்துவமனையை செயல்பாட்டுக்கு திறந்துவைத்தோம்” என்றார்.
