தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (செப்டம்பர் 16) நேரில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர் ஸ்டாலினிடம் திருமாவளவன் அளித்தார். இந்த சந்திப்பில், விசிக மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
மது ஒழிப்பு மாநாடு மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோரிய வீடியோ பதிவேற்றம் தொடர்பாக திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றிருந்தது.
இந்த நிலையில், முதலமைச்சருடன் உடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை திருமாவளவன் சந்தித்து பேசினார்.
கூட்டணியில் விரிசலும் இல்லை; நெருடலும் இல்லை!
அவர், “அமெரிக்காவில் பல ஆயிரம் கோடி முதலீடுகளை பெற்று சென்னைக்கு திரும்பியுள்ள முதலமைச்சரை இன்று நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தோம்.
தேசிய மதுவிலக்குக் கொள்கை ஒன்றை அறிவிக்குமாறு ஒன்றிய அரசைத் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தோம்.
அதற்கு உங்களது கோரிக்கையை இந்திய அரசின் கவனத்திற்கு எடுத்து செல்ல விரும்புகிறோம் என்றும், மதுவிலக்கு தமிழ்நாட்டில் வரவேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. நிர்வாக சிக்கலை கருத்தில்கொண்டு படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம்” என்று முதல்வர் கூறியிருக்கிறார்.
மேலும் கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2ஆம் தேதி விசிக நடத்தும் மது ஒழிப்பு மகளிர் மாநாட்டில் திமுக சார்பில் ஆர்.எஸ் பாரதி மற்றும் டி.கே.எஸ் இளங்கோவன் மாநாட்டில் பங்கேற்பார்கள் என முதலமைச்சர் உறுதியளித்தார்.
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற கருத்து தொடர்பாக எந்த கருத்தையும் இந்த சந்திப்பில் பேசவில்லை. திமுக – விசிக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. எந்த நெருடலும் இல்லை. நாங்கள் கூட்டணியில் உறுதியாகவே இருக்கிறோம். தேர்தலுக்கும் முதலமைச்சருடனான சந்திப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
புதுச்சேரி சிறுமியை சீரழித்து கொன்றவர் சிறையில் உயிரை மாய்த்த பின்னணி!
”விசிக நடத்தும் மதுவிலக்கு மாநாட்டில் அரசியல் இருக்கிறது” : செல்வப்பெருந்தகை