சனாதனவாதிகள் உள்ள ‘இந்தியா’ கூட்டணியிலிருந்து திமுக வெளியேறுமா என்று நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் நேற்று (செப்டம்பர் 2) நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா ஆகிய நோய்களைப் போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும்” என்று கூறினார்.
உதயநிதியின் இந்த பேச்சு தேசிய அளவில் பேசு பொருளாகியுள்ளது. பாஜகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி உதயநிதிக்கும் திமுகவுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று (செப்டம்பர் 3) அவர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “டெங்கு மலேரியா உங்க தாய்க்கும் மாப்பிள்ளைக்குமே முற்றி உள்ளதே…அவங்களை என்ன பண்ணுறதா உத்தேசம்?
ஊருக்கு உபதேசம் அதுவே திராவிடிய பரம்பரை யுக்தி.
அவ்வளவு சனாதனத்தின் மேல் வெறுப்பு உள்ளவர்களுக்கு இந்து கோவில் சொத்து மட்டும் கேட்குதோ ? முதல்ல உண்டியல்ல இருந்து கைய எடுங்க” என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், “சனாதனம் ஒரு கொடிய நோய் என்றும் அதை ஒழிப்பதே தங்கள் இலக்கு என்றும் முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி கூறியுள்ளார். தி.மு.க.வின் தாய் அமைப்பான திராவிடர் கழகத்தின் ஒரே அஜெண்டாவும் இதுதான்.
இந்தசூழலில் எத்தனையோ சனாதனவாதிகள் தலைமையிலான “இந்தியா” கூட்டணியிலிருந்து வெளியேறி திமுக தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் கஸ்தூரி.

இந்த பதிவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் கோயில்களில் வழிபாடு செய்யும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
பிரியா
