திமுகவும் (DMK) பாஜகவும் அடுத்த 3 மாதத்தில் கூட்டணி அமைத்துவிடும் என்று தமிழக அமைச்சர் என்.ஆனந்த் (Anand) தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டத்தில் அமைச்சர் என். ஆனந்த் பேசியதாவது: இன்னும் நீங்க மூணே மூணு மாசத்துல பாத்தீங்க அப்படின்னா… பிஜேபியுடன் திமுக கண்டிப்பாக கூட்டணி சேர்ந்து விடுவார்கள் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் தயாராகிவிட்டார்கள். இனிவருங்காலங்கள்ல இங்க எதுவுமே செய்ய முடியாது. இன்னும் 20 வருடத்துக்கு விஜய்தான் தமிழ்நாடு முதலமைச்சராக இருப்பார்.
அதுல எந்த மாற்றமும் இல்லை. ஏன் அப்படின்னு சொன்னீங்க அப்படின்னா… எங்களுடைய தலைவருடைய திட்டங்கள் அனைத்துமே மிகச் சிறப்பாக, மக்களுக்கு சேவை செய்யக்கூடிய திட்டமாகத்தான் இருக்கும். எந்த நேரமும் மக்களை நினைத்துக்கொண்டு, மக்களுக்கு என்ன செய்யலாம்னு சொல்லக்கூடிய ஒரு தலைவர் தான் எங்கள் தலைவர், நம்மளுடைய தலைவர் தளபதி.
ஊராட்சி மன்ற தேர்தல் வர இருக்கிறது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சொன்னார். கண்டிப்பாக அந்தத் தேர்தல்ல தமிழக வெற்றிக் கழகம் தான் வெற்றி பெறும் என்பதில் எந்தவித சந்தேகமுமே இல்லை. அதுல குறிப்பாக, தாய்மார்களுக்கு அதிக அளவு வாய்ப்புகள் தலைவர் தமிழக முதலமைச்சர் வழங்குவார் என்பதையும் இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்..
உங்களுக்கு என்ன பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும், எங்களிடம் நீங்கள் அதை சொன்னீர்கள் என்று சொன்னால், அதை நாங்கள் உடனடியாக செய்து தருவோம். இன்னும் கொஞ்சம்… இன்னும் ஒரு 10, 15 நாள் பொறுத்துக்குங்க. எல்லாம் எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் எல்லாருமே நீங்க பாத்தீங்க அப்படின்னா… எல்லாமே டிஜிட்டல் முறையில உங்களுக்கு கியூ ஆர் கோடு (QR Code) கொடுத்துருவோம். அதுல ஏதாவது நீங்க புகாரை தெரிவிக்கணும் அப்படின்னா, அது எங்களுக்கு உடனடியாக தெரியவரும். உடனடியாக நாங்கள் அதை சரி செய்து விடுவோம் என்பதை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அமைச்சர் என்.ஆனந்த் பேசினார்.
