தருமபுரம் ஆதினத்தை மிரட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திமுக ஒன்றிய செயலாளர் விஜயகுமாருக்கு தொடர்பில்லை என்று மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீன சைவ மடம் உள்ளது. இந்த ஆதீனத்தின் 27ஆவது தலைமை மடாதிபதியாக மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் இருந்து வருகிறார்.
மடாதிபதியின் சகோதரரும், தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான திருக்கடையூர் தேவஸ்தானத்தின் கணக்காளருமாக விருத்தகிரி உள்ளார்.
இவர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.
தருபுரம் ஆதினத்தின் ஆபாச வீடியோ, ஆடியோ இருக்கிறது. இதை வெளியிடாமல் இருக்க நாங்கள் கேட்கும் பணத்தை கொடுக்க வேண்டும் என்று முக்கிய அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் கொலை மிரட்டல் விடுத்ததாக அந்த புகாரில் தெரிவித்திருந்தார் விருத்தகிரி.
“செம்பனார்கோயிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனத்தின் தாளாளர் குடியரசு, மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ.க. தலைவர் அகோரம், தஞ்சை வடக்கு மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி பொதுச் செயலாளர் ஆடுதுறை வினோத், மயிலாடுதுறை பா.ஜ.க. மாவட்ட செயலாளர் திருவெண்காடு விக்னேஷ் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் மற்றும் செம்பனார்கோயில் தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் அமிர்த.விஜயகுமார் ஆகியோர் பெயரும் புகாரில் இடம் பெற்றிருந்தது.

இதுதொடர்பாக 4 பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
இந்த எப்.ஐ.ஆர்-ல் திமுக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் பெயர் இடம் பெற்றிருந்த நிலையில், இவர் தொடர்பாக விருத்தகிரி காவல்துறைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
“நான் ஏற்கனவே கொடுத்த புகாரின் பெயரில் காவல் துறை தக்க நடவடிக்கை எடுத்தமைக்கு காவல் துறைக்கு மிகவும் நன்றி. இதில் திருக்கடையூர் விஜயகுமார் இந்த பிரச்சினை விவகாரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்து உதவி செய்தவர் ஆவார்.
என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய நபர்களிடம் விஜயகுமார் பேசி, பிரச்சினையை சுமூகமாக தீர்த்துக் கொள்ள முயற்சி எடுத்தார். அது பலன் அளிக்கவில்லை.
அந்த நபர்கள் ரவுடிகளாக இருப்பதால் காவல்துறையை நாடுவது மிகவும் நல்லது என விஜயகுமார் கூறிய அறிவுரையினாலும், ஆலோசனையின் பெயரிலுமே நான் காவல் துறையை அணுகி உதவியை நாடினேன்.
எங்களுக்கு உதவி செய்தது தவிர விஜயகுமாருக்கு இந்த வழக்கில் வேறு எந்த தொடர்பும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
திமுக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் முதலில் திமுகவில் இருந்து பாமகவில் சேர்ந்தார். பின் அகோரத்தைப் பின்பற்றி பாஜகவுக்கு சென்றார். அதன் பின் மீண்டும் திமுகவுக்கு சென்று தனது சாதிய செல்வாக்கு காரணமாக ஒன்றிய செயலாளர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
‘GOAT’, ‘புஷ்பா 2’ படங்களை ‘கைப்பற்றிய’ முன்னணி ஓடிடி நிறுவனம்!
மோடிக்கு தோல்வி பயம்: ஸ்டாலின் தாக்கு!
