மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறாமல் போனதற்கு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கோரியுள்ளார்.
தொகுதி மறுவரையறை செய்யும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நேற்று மக்களவையில் தோல்வி அடைந்தது.
இதனை பட்டாசு வெடித்து கொண்டாடினார் முதல்வர் ஸ்டாலின்.
இந்தநிலையில் இன்று (ஏப்ரல் 18) இரவு நாட்டு மக்களிடம் உரையாடிய பிரதமர் மோடி, இந்த மசோதா நிறைவேற்ற முடியாததற்கு மன்னிப்பு கோரினார்.
இதுகுறித்து அவர், “நான் நாட்டின் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களிடம் பேசுவதற்காக வந்துள்ளேன். இந்தியாவின் பெண் சக்தியின் கனவுகள் எவ்வாறு இரக்கமின்றி நசுக்கப்பட்டுள்ளன என்பதை இன்று இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
“எங்களைப் பொறுத்தவரை நாட்டு நலனே முதன்மையானது. ஆனால், சிலருக்குக் கட்சி நலனே மேலானது என்று வரும்போது, அங்கே பெண்களின் முன்னேற்றமும் நாட்டின் நலனும் பாதிக்கப்படுகின்றன. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி போன்ற கட்சிகளின் சுயநல அரசியல், இந்த நாட்டுப் பெண்களுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களின் நலனுக்கான மசோதா தோற்கடிக்கப்பட்டபோது, காங்கிரஸ் மற்றும் திமுக போன்ற கட்சிகள் கைதட்டியும் மேஜையைத் தட்டியும் கொண்டாடியதைக் கண்டு நான் மனவேதனை அடைந்தேன். அவர்கள் பெண்களின் கண்ணியத்திற்கு அவமானம் இழைத்துள்ளனர்.
இந்த நாட்டின் பெண்கள் எப்போதெல்லாம் இந்தத் தலைவர்களைத் தங்கள் பகுதிகளில் பார்க்கிறார்களோ, அப்போதெல்லாம் நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீட்டைத் தடுத்து நிறுத்தியதைக் கொண்டாடியவர்கள் இவர்கள்தான் என்பதை நினைவு கூர்வார்கள்.
காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளும் நாட்டில் தொடர்ந்து பொய்களைப் பரப்பி வருகின்றனர். காங்கிரஸ் பிரித்தாளும் சூழ்ச்சியை செய்கிறது.
அனைத்து மாநிலங்களிலும் தொகுதிகளின் எண்ணிக்கை சமமான விகிதத்தில் உயரும் என்று அரசு தெளிவாகத் தெரிவித்த போதும், தொகுதி மறுவரையறை காரணமாகச் சில மாநிலங்கள் பாதிக்கப்படும் என்ற தவறான பிம்பத்தை இவர்கள் கட்டமைத்தனர்.
இன்று லட்சக்கணக்கான பெண்கள் பஞ்சாயத்துகளிலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர். இப்போது அவர்கள் மக்களவையிலும் மாநில சட்டமன்றங்களிலும் பணியாற்ற விரும்புகிறார்கள்.தொகுதி மறுவரையறைக்குப்பிறகு, பெண்களுக்கு அதிக இடங்கள் கிடைத்திருக்கும் மற்றும் அவர்களின் பிரதிநிதித்துவமும் அதிகரித்திருக்கும். ஆனால் எதிர்க்கட்சிகள் இதை எதிர்த்தார்கள்.
திமுக-விற்கு ஒரு வாய்ப்பு இருந்தது, அதேபோல் வங்காள மக்களை முன்னேற்றத் திரிணாமுல் காங்கிரஸிற்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது, சமாஜ்வாதி கட்சிக்கும் பெண்கள்-விரோதி என்ற தனது பிம்பத்தைக் குறைத்துக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. இதையெல்லாம் அவர்கள் வீணடித்துவிட்டார்கள்.
40 ஆண்டு கால போராட்டத்தை ஒரு நொடியில் உடைத்து விட்டார்கள். அரசியல் ஆதாயத்திற்காக சொந்த மாநிலத்திற்கே துரோகம் இழைத்துவிட்டார்கள்.
நேற்று எங்களிடம் போதிய எண்ணிக்கையிலான பலம் இல்லை, ஆனால் அதன் பொருள் நாங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டோம் என்பது அல்ல. எங்கள் முயற்சிகள் நின்றுவிடாது. எதிர்காலத்தில் எங்களுக்கு இன்னும் கூடுதலான வாய்ப்புகள் கிடைக்கும். நாட்டின் சரிபாதி மக்கள் தொகையின் கனவுகளுக்காகவும், தேசத்தின் எதிர்காலத்திற்காகவும், இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று கூறினார்.
