கட்சியில் வீரமிகு பாண்டியன், ஆட்சியில் பத்தரை மாற்றுத் தங்கம்! – தங்கப்பாண்டியன் நினைவில் திமுக

Published On:

| By Aara

1967 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றி திராவிட முன்னேற்றக் கழகம் வரலாற்று வெற்றியை பெற்று அண்ணா முதலமைச்சரானார்.

அதன் பிறகு ராமநாதபுரம் மாவட்டச் செயலாளரும் தனக்கு நெருக்கமானவருமான எஸ்.எஸ்.தென்னரசுவிடம், ‘மேலவைக்கு நல்லா படிச்ச திறமையான நம்ம கட்சிக்கார பையனா உங்க மாவட்டத்துலேர்ந்து வேணும்… அழைச்சிட்டு வா’ என்று ஆணையிட்டார்.

அண்ணா சொன்னதும் தென்னரசுவின் மனக்கண்ணில் சட்டென வந்தவர், தங்கப்பாண்டியன் தான்.

‘அண்ணா… நீங்க கேட்ட அத்தனை தகுதியும் உடையவர்’ என்று அண்ணாவின் முன் தங்கப்பாண்டியனை கொண்டு போய் நிறுத்தினார் தென்னரசு.

தங்கப்பாண்டியன் அப்போது, ‘அண்ணா… நான் மதுரை தியாகராசர் கல்லூரியில படிக்கும்போது மாணவர் மன்ற தலைவரா இருந்தேன். உங்களை அழைச்சி கூட்டங்கள் நடத்தியிருக்கேன்’ என்று சொல்ல, அண்ணாவுக்கு ஒவ்வொன்றாய் நினைவுக்கு வந்தது. 1968 முதல் தங்கப்பாண்டியனை சட்ட மேலவை உறுப்பினராக்கினார் அண்ணா.

1949 இல் திமுக தொடங்கப்பட்டதில் இருந்து அதன் உறுப்பினராக சேர்ந்த தங்கப்பாண்டியன், கல்லூரி முடித்துவிட்டு அரசுப் பள்ளி ஆசிரியரானார்.  தன் சொந்த ஊரான  மல்லாங்கிணறு அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராகவும் ஆனார். கட்சிப் பணிகளில் ஆர்வம் மிகுதியால் ஒரு கட்டத்தில் ஆசிரியர் பணியை உதறிவிட்டு திமுகவில் முழு நேர பணியாளராக செயல்பட்டார்.

அண்ணாவால் மேலவை உறுப்பினராக்கப்பட்ட தங்கப்பாண்டியன் மீது கலைஞர் பேரன்பு கொண்டிருந்தார்.

1974 இல் தங்கப்பாண்டியனை மாவட்டச் செயலாளராகவும் உயர்த்தினார் கலைஞர். எமர்ஜென்சி காலகட்டத்தில் ஓராண்டு சிறையில் தள்ளப்பட்டார் தங்கப்பாண்டியன்.

1989 இல் தங்கப்பாண்டியனை அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக்கினார் கலைஞர். தன்னை எதிர்த்து நின்ற அதிமுக வேட்பாளரை விட 15 ஆயிரம் வாக்குகள் அதிகம் வாங்கி வென்றார் தங்கப்பாண்டியன்.

அண்ணாவால் சட்ட மேலவை உறுப்பினராக்கப்பட்ட தங்கப்பாண்டியன், கலைஞரால் சட்டமன்ற உறுப்பினர் ஆக்கப்பட்டார்.  1996 இல் மீண்டும் வெற்றி பெற்ற தங்கப்பாண்டியனை கூட்டுறவு, உணவு துறை அமைச்சராக்கி அழகு பார்த்தார் கலைஞர்.

சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதும் சரி, அமைச்சராக இருந்தபோதும்  சரி… சென்னையில் தனது வேலை முடிந்ததும் உடனடியாக ஊருக்குப் புறப்பட்டுவிடுவார் தங்கப்பாண்டியன்.

கேட்டால் தொகுதி வேலைகள் இருக்கு, கட்சி வேலைகள் இருக்கு என்று சொல்லி, ஊரில் தான் கலந்துகொள்ள வேண்டிய நிகழ்ச்சிகளை பட்டியல் போடுவாராம் தங்கப்பாண்டியன்.

இதனாலேயே,  ‘சொந்த ஊருக்கு தங்கப்பாண்டியன். சென்னைக்கு ’தங்கா பாண்டியன்’ என்று தனக்கே உரிய பாணியில் குறிப்பிட்டார் கலைஞர்.

சென்னையில் தங்கா பாண்டியனாக இருந்த தங்கப்பாண்டியன், 1997 இல் ராஜபாளையத்தில் ஏற்பட்ட கலவரத்தையடுத்து அங்கே சென்றார். அப்போது ராஜபாளையத்திலேயே ஜூலை 31 அன்று தன் இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார்.

தங்கப்பாண்டியனின் கட்சிப் பணிக்கு மரியாதை அளிக்கும் விதமாக அவரது மகள் தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கும், மகன் தங்கம் தென்னரசுவுக்கும் திமுகவில் கௌரவமான பதவிகளைக் கொடுத்தார் கலைஞர். அதைத் தொடர்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

முன்னாள் அமைச்சர், முன்னாள் மாவட்டச் செயலாளர், முன்னாள் மேலவை உறுப்பினர் என்று எத்தனை அரசியல் அடைமொழிகள் இருந்தாலும் , ‘மல்லாங்கிணறு சார்’ என்பதுதான் தங்கப்பாண்டியனுக்கு இன்றும் விருதுநகர் மக்களால் வழங்கப்படும் மனதார்ந்த பட்டம்!

மாவட்டச் செயலாளர் என்ற பொறுப்பில் வீரமிகு பாண்டியன், அமைச்சர் பொறுப்பில் பத்தரை மாற்றுத் தங்கம் என்று தங்கப்பாண்டியனின் பெயரை வைத்தே கலைஞர் அவரது கட்சி மற்றும் ஆட்சி செயல்பாடுகளை அழகாய் விளக்கியிருக்கிறார்.

(இன்று ஜூலை 31 தங்கப்பாண்டியனின் நினைவு தினம்)

வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பெலிக்ஸுக்கு ஜாமீன்: ரெட்பிக்ஸ் சேனலை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு!

7 நாட்களுக்கு முன்பே எச்சரித்தும் கேரளா என்ன செய்தது? கொதிக்கும் அமித்ஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share