தமிழக பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாவை தாமதப்படுத்துவதை எதிர்த்து திமுக மாணவர் அணி தலைமையில் ஆளுநர் மாளிகை அருகே இன்று (ஜூன் 16) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டு மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பை பாதிக்கும் வகையில் பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாவை நடத்தாமல் தமிழ்நாடு ஆளுநர் ரவி காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.
இதனைக் கண்டித்து ஆளுநரை பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று திமுக மாணவரணி உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் இன்று (ஜூன் 16) கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே சின்னமலை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி, செயலாளரான சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் தலைமையில் இந்த போராட்டமானது நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் மாணவரணிகளுடன் இணைந்து பல்வேறு மாணவர் அமைப்புகளும் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில், ”நீட் தேர்வை ரத்து செய் தேசிய கல்விக் கொள்கையைத் திணிக்காதே, நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் தமிழ்நாட்டு சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கு, தமிழ்நாட்டிற்கு ஆளுநரே தேவையில்லை, மாணவர்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும் ஆளுநருக்கு பல்கலைக்கழக வேந்தர் பதிவு தேவையா?” ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளைக் கையில் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பப்பட்டு போராட்டம் நடைபெற்றது.
இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாகா மாற்றம் தொடர்பாக தமிழ்நாடு அரசு பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்கவில்லை. மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி விலக வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு பலரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் தான் யார் அமைச்சராக இருப்பார்கள் என்று முடிவு செய்ய வேண்டும். ஆளுநருக்கு அந்த உரிமை கிடையாது. ஆளுநர் அரசியலமைப்பை மதிக்க வேண்டும் என்று கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
மோனிஷா
செந்தில் பாலாஜிக்கு சர்ஜரி எப்போது?: காவேரி மருத்துவமனை!
மாநில முதல்வரா? குடும்ப முதல்வரா? ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
