2026 தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி மீண்டும் அமைவதற்கு இளைஞரணியின் 45- வது ஆண்டு தொடக்க விழாவில் உறுதியேற்போம் என்று அமைச்சரும் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
1980ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி மதுரை ஜான்சிராணி பூங்காவில் திமுக இளைஞரணி தொடங்கப்பட்டது. 44 ஆண்டுகள் நிறைவடைந்து 45ஆவது ஆண்டில் திமுக இளைஞரணி நாளை(ஜூலை 20) அடியெடுத்து வைக்கிறது.
இதை முன்னிட்டு திமுக இளைஞரணியினருக்கு இன்று (ஜூலை 19)அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “கோபாலபுரத்தில் உள்ள ஒரு முடி திருத்தகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட ‘கோபாலபுரம் இளைஞர் திமுக’தான் 1980-ல் மதுரை ஜான்சி ராணி பூங்காவில் இளைஞர் அணி என்னும் அதிகாரப்பூர்வ அணியாக மாறியது.
கடந்த 1982-ல் கலைஞரால், இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்ட ஸ்டாலின், இளைஞரணியை வலிமை வாய்ந்த ஆற்றல்மிக்க அணியாக உருவாக்கினார்.
கலைஞர் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வதாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்து ஆளுங்கட்சியின் மக்கள் விரோத போக்கை எதிர்ப்பதாக இருந்தாலும் இளைஞர் அணி தொடர்ந்து முன்னணியில் நின்றது.
திமுகவின் செயல் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், இளைஞரணியின் செயலாளராக வெள்ளக்கோயில் சாமிநாதன் பணியாற்றினார்.
கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, ஜூலை 4ஆம் தேதி இளைஞரணி செயலாளராக நான் பொறுப்பேற்றேன். 25 லட்சம் புதிய இளைஞர்களை உறுப்பினர்களாகச் சேர்த்தோம்.
இந்தாண்டு சேலத்தில் இளைஞர் அணியின் 2 வது மாநில மாநாட்டை எழுச்சியுடன் நடத்தினோம். கலைஞர் நூற்றாண்டு பேச்சுப்போட்டி, திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டங்களை நடத்துவது உள்ளிட்ட பணிகளுக்கு ஆயத்தமாகி வருகிறோம்.
இப்படி இளைஞர் அணி ஆற்றிய பணிகள் ஏராளம் என்றாலும், காத்திருக்கும் பணிகளும் ஏராளம்.
மூன்றாண்டு திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. இந்த வளர்ச்சியை சீர்குலைக்க வேண்டும், மக்களைப் பிளவுபடுத்தி, மதவாத, சாதியவாத வெறியூட்டி அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்று ஒருபுறம் பாசிச சக்திகள் காத்திருக்கின்றனர்.
இன்னொருபுறம், திமுக எதிர்ப்பை மட்டுமே முதன்மை இலக்காக்கி திமுக, திராவிட இயக்க முன்னோடிகள், திராவிட மாடல் ஆட்சியின் மீதும், அவதூறுகளையும் பொய்ச்செய்திகளையும் பரப்பி வீழ்த்த நினைப்பவர்களும் காத்திருக்கின்றனர்.
ஆனால், நமக்கோ 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் காத்திருக்கிறது. தொடர் வெற்றிகளைக் குவித்துவரும் தலைவர் தலைமையில், 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றிபெற்று, திமுக ஆட்சி மீண்டும் அமைந்து, தமிழகம் மென்மேலும் வளர்ச்சியடைய வேண்டும். இந்த கடமையை நிறைவேற்றும் பொறுப்பு இளைஞரணிக்கு உள்ளது.
சதிகளை முறியடித்து சாதனை ஆட்சியை, மீண்டும் 2026-ல் அமைக்க இளைஞர் அணியின் 45-ஆம் ஆண்டு விழாவில் உறுதியேற்போம்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ஆம்ஸ்ட்ராங் கொலையில் பெண் தாதாக்கள்… யார் இந்த மலர்கொடி, அஞ்சலை?