நாங்க பிஎச்.டி பாஸ்… நீங்க எலிமெண்டரி ஸ்கூல் : ஆளுநரை கண்டித்து கனிமொழி பேச்சு!

Published On:

| By Kavi

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று (ஜனவரி 7) திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக சட்டப்பேரவை நேற்று (ஜனவரி 6) தொடங்கியது. அப்போது முதலில் தேசிய கீதம் பாட வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட நிலையில், இதற்கு அதிருப்தி தெரிவித்து உரையாற்றாமல் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ரவி புறப்பட்டு சென்றுவிட்டார்.

இந்நிலையில் ஆளுநரை கண்டித்து தமிழ்நாட்டின் அனைத்து தலை நகரங்களிலும் திமுக ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, தயாநிதி மாறன் எம்.பி உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆளுநருக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர்.

“வெளியேறு… வெளியேறு தமிழ்தாயை அவமதித்த ஆளுநரே வெளியேறு… ஒன்றிய அரசே மோடி அரசே சட்டமன்ற மாண்புகளை அவமதித்த ஆளுநரை திரும்ப பெறு, பறிக்காதே, பறிக்காதே ஆளுநரை வைத்துக்கொண்டு ஒன்றிய அரசே மாநில உரிமையை பறிக்காதே” என்று கோஷங்களை எழுப்பினர்.

இதன்பின் கண்டன உரையாற்றிய தயாநிதிமாறன், “இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி, இந்தியாவுக்கே தலைவர் ஜனாதிபதி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இவரை தேர்ந்தெடுப்பார்கள். பிரதமர் என்ன சொல்கிறாரோ அதைத்தான் அவர் செய்வார்.

ஒவ்வொரு ஆண்டும் முதல் கூட்டத்தொடரில் அவர்தான் பேசுவார். அவர் பேசும் உரையை பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூடி முடிவு செய்வார்கள். அதை தவிர ஒரு கமாவை கூட கூடுதலாக அவரால் சேர்த்து சொல்ல முடியாது.

தமிழ்நாட்டில் ரிட்டையர் ஆன ஒருவர் ஆளுநராக இருக்கிறார். ஐயா வேலை குடுஙக ஐயா.. ஆளுநர் பதவி குடுங்கையா என்று கேட்டு வந்துவிட்டு, இப்போது பதவி காலம் முடிந்ததும் வீட்டுக்கு போகாமல், தமிழ்நாடு அரசை எதிர்க்கிறேன் என்கிறார். யாரை முதல்வர் ஸ்டாலினை எதிர்க்கிறாராம்.

தமிழ்நாட்டுக்கு வந்தால் நாங்கள் சொல்வதைதான் செய்ய வேண்டும். நீங்களாக எதுவும் செய்ய முடியாது.

முதலில் சொன்னதை செய்துவிட்டு, இப்போது பதவி முடிந்த பிறகு அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தைய, தக்கவென தாளம் போட்டுக்கொண்டிருக்கிறார்.

எங்களது தமிழ்த்தாய் வாழ்த்தை அவமானப்படுத்துவதா? இதுபோன்று தொடர்ந்து செய்தால் தமிழ்நாட்டு மக்கள் உங்களை மன்னிக்கவே மாட்டார்கள். உங்கள் பருப்பு இங்கு வேகாது” என்று காட்டமாக பேசினார்.

தொடர்ந்து பேசிய கனிமொழி, “ஆளுநர் மூன்றாவது ஆண்டாக ஹாட்ரிக் அடித்திருக்கிறார். பள்ளி பிள்ளைகள் வயிறு வலி, பல் வலி என்று கண்டுபிடிக்க முடியாத காரணத்தை சொல்லி வீட்டுக்கு வந்துவிடுவார்கள். அதைத்தான் இன்று ஆளுநர் செய்து கொண்டிருக்கிறார்.

நீங்கள் வீட்டில் இருந்து லீவு லெட்டர் அனுப்புங்கள். எங்கள் முதல்வர் போனால் போகட்டும் என்று விட்டுவிடுவார். எதற்கு அங்கிருந்து வந்து பாதியில் ஓடுகிறீர்கள்.
எங்களுடைய எதிரிகளை புறமுதுகிட்டு ஓட செய்வது எங்களுக்கு பழகிவிட்டது.

நீங்களாக ஏம்ப்பா… ஒவ்வொரு முறையும் வந்து அசிங்கப்பட்டு அவமானப்படுகிறீர்கள். அவர்(ஸ்டாலின்) எழுந்து நின்றாலே பயந்து ஓடுகிறீர்கள்.

எதற்கு உங்களுக்கு இந்த கஷ்டம். வீட்டில் இருந்தவாறே சொல்லிவிடுங்கள்.. சரி வரவில்லை என்று. அவர் விட்டுவிடுவார். நல்ல மனிதன்.

தயவு செய்து வந்து அசிங்கப்படாதீர்கள். எனக்கே பாவமாக இருக்கிறது.
உங்களுக்கு ஒன்னுமே தெரியாமல் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறீர்களா… சட்டமன்றத்தில் நாங்கள் கடைபிடித்திருக்ககூடிய பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு, வழிமுறை எல்லாம் தமிழ்த்தாய் தான் முதலில் பாடப்படும் என்பதுதான். இதுதான் எங்களுடைய சட்டம்.

நாங்கள் தேசிய கீதத்தை அவமதிக்கவில்லை. அதற்கும் இடம் இருக்கிறது. நீங்கள் ஏன் தேசிய கீதத்தை பிடித்துகொண்டிருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை.
உங்களுக்கும் இந்த நாட்டின் விடுதலைக்கும் என்ன சம்பந்தம். தந்தை பெரியார் உட்பட நாட்டின் விடுதலைக்காக தமிழ்நாட்டில் இருந்து பலர் போராடியிருக்கிறார்கள்.

ஆனால் நீங்கள் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துவிட்டு ஓடி வந்தவர்கள். உங்களுக்கும் இந்த நாட்டுக்கும், உரிமைக்கும், தேசிய கீதத்துக்கும் என்ன சம்பந்தம். அதை பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்.

இந்த நாட்டிலேயே போர் மூண்டபோது இந்தியாவிலேயே அதிகமாக நிதி திரட்டி தந்தது கலைஞர். நீங்கள் எங்கே இருந்தீர்கள்?.

எனவே இந்த நாட்டை, தேசிய கீதத்தை, அரசியலமைப்பு சட்டத்தை, மக்களை காப்பாற்றுவதற்கு எங்கள் முதல்வருக்கு தெரியும்.

எனவே நீங்கள் எங்களுக்கு பாடம் எடுக்கக் கூடிய இடத்தில் நாங்கள் இல்லை. பிஎச்,டி பாஸ் செய்துவிட்டோம். நீங்கள் தான் எலிமெண்டரி ஸ்கூலில் காரணம் சொல்லிவிட்டு எக்ஸாம் எழுதாமல் ஓடி வந்திருக்கிறீர்கள். வேண்டாம் அந்த வேலை.. விட்டுவிடுங்கள்.

முதல்வரின் பொறுமைக்கும் எல்லை உண்டு. எங்களது ஓட்டு சதவிகிதம் அதிகரித்து வருவதாக பாஜக சொல்கிறது. ஆனால் நீங்கள் இங்கு இருந்தீர்கள் என்றால் ஓட்டு சதவிகிதம் குறைந்துகொண்டே இருக்கும்.

எனவே உங்கள் நல்லதுக்குதான் சொல்கிறேன்… ஒரு ஒட்டு கூட பாஜக வாங்கவில்லை என்ற நிலைக்கு கொண்டுவந்து விட்டுவிடாதீகள், தயவு செய்து அவரை கூட்டிக்கொண்டு சென்றுவிடுங்கள். எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

திராவிட மாடல் ஆட்சி என்றாலே இவர்களுக்கு தூக்கத்தில் கூட பயம் வந்துவிடுகிறது. மற்ற மாநிலத்தில் ஆளுநரை மாற்றியிருக்கிறார்கள். ஆனால் இந்த ஆளுநரை மட்டும் ஏன் இங்கு வைத்திருக்கிறது பாஜக” என்று கேள்வி எழுப்பினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

மன்மோகன் சிங், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்!

கிச்சன் கீர்த்தனா : மஷ்ரூம் அண்டு ரோஸ்ட் வெஜ் பொங்கல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share