66/505 : திமுக வாக்குறுதிகள் குறித்து அன்புமணி வெளியிட்ட டேட்டா!

By Kavi

|

Published on 26 Aug 2025, 5:00 PM

2021 சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக அறிவித்த வாக்குறுதிகளில்66 வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில், திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிகளில், நான்கரை ஆண்டுகள் ஆகியும், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை “விடியல் எங்கே” என்ற பெயரில் ஆவண புத்தகத்தை பாமக தயாரித்தது.

ADVERTISEMENT

இந்த தொகுப்பை சென்னை தி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சித் தலைவர் இன்று (ஆகஸ்ட் 26) வெளியிட்டார்.

இதுதொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில், “ திமுக அளித்த வாக்குறுதிகளின் எண்ணிக்கை – 505. முழுமையாக நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் – 66. அரைகுறையாக நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் – 66. நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் – 373

ADVERTISEMENT

திமுக அளித்த வாக்குறுதிகளில் 12.94% மட்டும்தான் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள 87.06% வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநில சுயாட்சி, தமிழ் வளர்ச்சி,  நிர்வாக சீர்திருத்தம்; சேவை உரிமைச் சட்டம் இல்லை, உழவர்கள் நலன், நீர்ப்பாசனத் திட்டங்கள் இல்லை, மீனவர்கள் நலன், நெசவாளர்கள் நலன், தொழிலாளர்கள் நலன், மாணவர்கள் நலன் மற்றும் வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, மின்கட்டணம் குறைக்கப்படவில்லை, பொதுவிநியோகத் திட்டம், பெண்கள் பாதுகாப்பு, அரசு ஊழியர்கள் நலன், சட்டப்பேரவை, அரசு நிர்வாகம், காவல்துறை, அறநிலையத்துறை, போக்குவரத்து என துறை வாரியாக பிரித்து எந்தெந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன, எது எது நிறைவேற்றப்படவில்லை என்று பட்டியலிடப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி, “தமிழ்நாட்டில் எங்கேயும் விடியல் இல்லை என்று இந்த ஆவணம் மூலம் நிரூபித்துள்ளோம். தமிழ்நாடு இன்று இருண்டு கிடக்கிறது. திமுக மக்களுக்கு கொடுத்தது எல்லாம் ஏமாற்று, பித்தலாட்டம், ஊழல், நிர்வாக சீர்கேடுகள் தான். வாயைத் திறந்தால் பொய்யைத் தவிர வேறு எதுவும் கிடையாது” என்று கடுமையாக விமர்சித்தார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel