வென்டிலேட்டரில் திமுக : உதயநிதிக்கு எடப்பாடி பழனிசாமி பதில்!

Published On:

| By Kavi

திமுக அரசுக்கு வென்டிலேட்டர் வைக்கப்பட்டுள்ளது, 2026-ல் வென்டிலேட்டர் எடுக்கப்பட்டவுடன் ஆம்புலன்ஸில் அனுப்பிவைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் அதிமுக கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஒன்று புகுந்ததால் கோபமான எடப்பாடி பழனிசாமி, இனி கூட்டத்துக்குள் ஆம்புலன்ஸ் வந்தால் அதன் டிரைவர், அதே ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்படுவார் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று சைதாப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சு குறித்து விமர்சித்திருந்தார்.

ADVERTISEMENT

விரைவில் அதிமுக ஆம்புலன்ஸில் செல்லும். ஐசியு பிரிவில் அனுமதிக்கப்படும். எடப்பாடி பழனிசாமியை காப்பாற்றும் பொறுப்பையும் முதல்வர்தான் செய்வார் என்று கூறியிருந்தார்.

இந்தசூழலில் இன்று (செப்டம்பர் 8) மாலை கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில், நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

ADVERTISEMENT

அவர் பேசுகையில், “துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,அதிமுக ஆம்புலன்ஸில் செல்லும் நிலையில் உள்ளது. தற்போது ஐசியுவில் உள்ளது என ஆணவத்தோடு பேசியிருக்கிறார். உங்கள் தந்தை வெளிநாடு செல்லும் ரகசியத்தை சொன்னால் நீங்கள் தாங்க மாட்டீர்கள். எனவே உதயநிதி அவர்களே பேசும் போது நிதானத்தோடு பேசுங்கள். அதிமுகவுக்கு ஒருபோதும் ஆம்புலன்ஸில் செல்லும் நிலை ஏற்படாது. ஆனால் மக்கள் உங்களை 2026-ல் ஆம்புலன்ஸில் அனுப்பிவைப்பார்கள். அதற்கான நேரம் வந்துவிட்டது. திமுக அரசுக்கு வென்டிலேட்டர் வைக்கப்பட்டுள்ள நிலையில் தான் எஞ்சிய 7 மாத ஆட்சி உள்ளது. 2026-ல் வென்டிலேட்டர் அகற்றப்பட்டால் ஆம்புலன்ஸில் தான் செல்லவேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், “தற்போது திருக்கோவிலூர் மற்றும் ரிஷிவந்தியம் ஆகிய இரு தொகுதி மக்கள் இங்கு திரண்டு வந்திருப்பதை பார்க்கும் போது, ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறியாகவே நான் பார்க்கிறேன். இன்று தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தால் தான், ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று அர்த்தம். ஆனால் தமிழ்நாட்டில் தினம் கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை தான் நடக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை உருவாக்கிய கையோடு, அரசு மருத்துவக் கல்லூரியை அமைத்துக் கொடுத்தது அதிமுக ஆட்சி. ஆனால் அதை முறையாக பராமரிக்காமலும், போதிய மருத்துவர்களை நியமிக்காமலும் இந்த மாவட்ட மக்களுக்கு முழுமையான சுகாதார வசதியை மேற்கொள்ளவில்லை.

திமுகவினர் சமூக நீதி பற்றி வாய்கிழிய பேசுகின்றனர். ஆனால் திண்டிவனம் நகராட்சியில் பட்டியலினத்தைச் சேர்ந்த அரசு அலுவலர், கவுன்சிலரின் காலில் விழுந்து கதறும் சம்பவத்தை அனைவரும் பார்த்திருப்பீர்கள். இதுதான் திமுகவின் சமூக நீதி” என்றார்.

இந்த கூட்டத்துக்கு முன்னதாக திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் 126 அடி உயர கம்பத்தில் அதிமுக கொடியேற்றினார் எடப்பாடி பழனிசாமி. கள்ளக்குறிச்சியில் நடந்த ’மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ பொதுக்கூட்டத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் கலந்துகொண்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share