திமுக முப்பெரும் விழா: யாருக்கெல்லாம் விருது தெரியுமா?

Published On:

| By Balaji

திமுக முப்பெரும் விழாவில் விருது பெறுவோரின் பட்டியலை திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.

திமுக சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா, அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் என முப்பெரும் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த வருடம் விருது பெறுவோரின் பட்டியலை திமுக தலைமைக் கழகம் இன்று (ஆகஸ்ட் 27) அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதன்படி தந்தை பெரியார் விருது மா.மீனாட்சி சுந்தரத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த இவர், திமுகவின் நாகை மாவட்ட அவைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். நாகை மாவட்டத் திராவிட இயக்கத்தின் மூத்த முன்னோடிகளில் ஒருவர்.

பேரறிஞர் அண்ணா விருது பேராசிரியர் அ.ராமசாமிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், கல்விப்புலம் சார்ந்தவராக மட்டுமல்லாமல் நிகழ்காலத் தமிழ் இலக்கியம், அரசியல், கலை, பண்பாடு சார்ந்த சிற்றிதழ்களில் எண்ணற்ற ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

ADVERTISEMENT

கலைஞர் விருது திமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ். என். எம். உபயதுல்லாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 4 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், வணிகவரித் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது திமுகவின் வர்த்தகர் அணி தலைவராக உள்ளார். பாவேந்தர் பாரதிதாசன் விருது அ.தமிழரசிக்கு வழங்கப்பட்டுள்ளது. பேராசிரியர் விருது திமுக மாநில பொதுக் குழு உறுப்பினரும், மொழிப்போர் தியாகியுமான சுப.ராஜகோபாலனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

“திமுக முப்பெரும் விழாவில் விருதுகள் பெறுவோர் விவரம்”

– தலைமைக் கழக அறிவிப்பு.#DMK pic.twitter.com/blsiHLmdr4

— DMK (@arivalayam) August 27, 2020

சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெறும் முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கப்படும் என திமுக அறிவித்துள்ளது. திமுகவின் முப்பெரும் விழா கடந்த சில ஆண்டுகளாக விழுப்புரம், திருவண்ணாமலை என வெவ்வெறு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூட பிரமாண்டமாக நடைபெற்று வந்தது. கொரோனா பரவல் காரணமாக அதுபோன்று விழாக்களை நடத்த முடியாது என்பதால் கலைஞர் அரங்கில் சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்பட்டு நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

**எழில்**,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share