மக்களவையில் இன்று (மார்ச் 10) புதிய கல்வி கொள்கை தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்தபோது, திமுக எம்.பி-க்கள் கோஷமிட்டதால் அவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. DMK MPs sloganeering Pradhan
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது. கேள்வி நேரத்தின் போது தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், “தேசிய கல்வி கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்தாததால், பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய ரூ.2000 கோடி மற்ற மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டித்துள்ளார். தமிழகத்தை பழிவாங்கும் நோக்கத்தோடு கல்வி நிதி முடக்கப்பட்டுள்ளது. சட்டத்தால் கட்டாயப்படுத்தப்படாத கொள்கையை மாநில அரசு நிராகரிக்கும்போது அவர்களுக்கான நிதி பங்கீடுகளை குறைக்கக்கூடாது என்பதை மத்திய அரசால் உறுதி செய்ய முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தமிழக அரசு முதலில் மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக்கொண்டது. பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றியது. இப்போது என்னிடம் கேள்வி கேட்ட தமிழச்சி தங்கபாண்டியன், மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் சில தமிழக எம்.பி-க்கள் என்னை நேரில் வந்து சந்தித்து பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தனர். பின்னர் தற்போது தங்கள் நிலைப்பாட்டை மாற்றி பேசுகிறார்கள். இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ள முதல்வர் தயாராக இருந்தார். ஆனால், சூப்பர் முதல்வர் ஒருவர் வந்து அதனை மாற்றிவிட்டார்.
பாஜக ஆளாத பல மாநிலங்கள் தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளன. உதாரணமாக கர்நாடகா, ஹிமாச்சல் போன்ற மாநிலங்களை சொல்லலாம். ஆனால், திமுகவினர் நேர்மையற்றவர்கள். அவர்கள் தமிழ்நாட்டு மாணவர்களிடம் உறுதியாக இல்லை. அவர்கள் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்குகிறார்கள். மொழி பிரச்சனைகளை தூண்டுவது மட்டுமே அவர்களின் வேலை. இந்த விவகாரத்தில் அரசியல் செய்கிறார்கள். இவர்கள் ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள், நாகரிகமற்றவர்கள்” என்று கோபமாக பேசினார்.
தர்மேந்திர பிரதான் பேசிக்கொண்டிந்தபோது, அனைத்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் எழுந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. தொடர்ந்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தமிழக எம்.பி-க்களின் தொடர் முழக்கத்தால் மக்களவையை மதியம் 12 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். DMK MPs sloganeering Pradhan
