மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி-க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (மார்ச் 11) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். DMK MPs protest parliament
“பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காதது ஏன்?” என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் நேற்று (மார்ச் 10) மக்களவையில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், முதலில் இந்த திட்டத்தில் சேர திமுக அரசு சம்மதித்ததாகவும், பின்னர் அதிலிருந்து பின்வாங்கியதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், திமுக எம்.பி-க்களை அநாகரிகமானவர்கள், நேர்மையற்றவர்கள், ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் என்று கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார்.
திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, தர்மேந்திர பிரதானின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தனது பேச்சை திரும்ப பெற்றுக்கொள்வதாக தர்மேந்திர பிரதான் மக்களவையிலேயே தெரிவித்தார்.

தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும், தமிழகம் முழுவதும் திமுக சார்பில் தர்மேந்திர பிரதானை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சில இடங்களில் அவரது கொடும்பாவி கொளுத்தப்பட்டது.
இந்தநிலையில், தர்மேந்திர பிரதானுக்கு எதிராக மக்களவையில் இன்று கனிமொழி உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கியுள்ளார். தர்மேந்திர பிரதான் பேச்சை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி-க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். “தமிழர்களை இழிவுபடுத்திய தர்மேந்திர பிரதான் ஒழிக… வேண்டும், வேண்டும் நீதி வேண்டும்…” என்று முழக்கமிட்டனர்.
“இந்தியை ஏற்க மாட்டோம், மும்மொழியை ஏற்க மாட்டோம். மமதையோடு பேசிய மந்திரி பிரதானே மன்னிப்பு கேள்” என்று மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ முழக்கமிட்டார்.
பின்னர் ஏஎன்ஐ ஊடகத்திற்கு பேட்டியளித்த கனிமொழி, “தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. மும்மொழிக் கொள்கையிலும் தேசிய பொருளாதாரக் கொள்கையிலும் கையெழுத்திட வேண்டும் என்று நிர்பந்திக்கிறார்கள்.
தமிழ்நாட்டு குழந்தைகளின் எதிர்காலத்தை நாசமாக்குகிறார்கள். நிதியை நிறுத்தி வைக்க மத்திய அரசுக்கு உரிமை இல்லை. நாங்கள் நேர்மையற்றவர்கள் என்றும், தமிழ்நாட்டு மக்கள் நாகரிகமற்றவர்கள் என்றும் நேற்று, தர்மேந்திர பிரதான் மிகவும் மோசமான முறையில் பதிலளித்தார். அவரது பேச்சு முற்றிலும் ஜனநாயக விரோதமானது. தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தெரிவித்தார். DMK MPs protest parliament