தமிழக சட்டசபையில் நேற்று நடந்த சம்பவங்கள் தொடர்பாக திமுக-வின் மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் கூட்டாக இன்று காலை ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் திருச்சி சிவா எம்.பி., கூறுகையில், ‘திமுக-வின் சட்டமன்றத் தலைவர் ஸ்டாலின் சார்பில் இந்த மனுவை நாங்கள் ஆளுனரிடம் அளித்துள்ளோம். நேற்றைய நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அவையில் அரங்கேறிய விவகாரங்கள் குறித்து அவருக்கு விளக்கினோம். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாரும் அவையில் இல்லாமல் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பானது சட்டவிரோதமானது. காவல்துறையினர் சட்டமன்ற அவைக் காவலர்கள் உடையில் உள்ளே புகுந்து திமுக உறுப்பினர்களை வெளியேற்றியிருப்பதன் மூலம், இது முன்கூட்டியே திட்டமிட்ட செயல் என்பது உறுதியாகிறது. நாங்கள் அளித்த மனுவை கண்டிப்பாக பரிசீலிப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்’ என்று அவர் கூறினார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடர்பாக ஆளுநரிடம் ஆதாரங்களுடன் புகார் வழங்கியுள்ளோம். மேலும், இதுதொடர்பாக குடியரசுத்தலைவரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம் என்றும் தெரிவித்தார்.”