மறைந்த மாமனிதர் விஜயகாந்த்துக்கு அவரோடு பல்வேறு சந்தர்ப்பங்களில் பழகிய பிரபலங்கள் தங்கள் ஞாபக அடுக்குகளில் இருந்து நினைவுப் பூக்களை பரிமாறி வருகிறார்கள்.
இதோ திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவின் நினைவுகள்…
“புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் என் மீது ஆழ்ந்த அன்புகொண்ட நெருங்கிய நண்பர். படப்பிடிப்புக்காக புதுடெல்லி வரும்போது என் வீட்டில் தங்கி சென்ற நாட்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன. நினைவு கூறக்கூடிய நிகழ்வுகள் நிரம்ப உண்டு.
திரை வானத்தில் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள். கேப்டன் அதில் துருவ நட்சத்திரம். அரசியலில் அவர் பயணம் தனிச்சுவடு பதித்ததும், பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியதையும் யாரும் மறுக்க முடியாது.
நினைவில் நிற்கும் அவர் நடித்த உணர்ச்சி மிக்க படக்காட்சிகள், “ ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு” போன்ற வானத்தைப் போல மனம் படைத்த அந்த மன்னவனின் படப்பாடல்கள் காலத்தால் அழியாமல் ரீங்காரமிட்டு கொண்டேயிருக்கும்.
நலம்பெற்று மருத்துவமனையிலிருந்து வருவார் என “காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி” என ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
திரைப்பட நடிகர், நடிகர் சங்கத் தலைவர், அரசியல் கட்சித்தலைவர், சட்டமன்ற உறுப்பினர், எதிர் கட்சித் தலைவர். பரோபகார உள்ளம் கொண்ட மாமனிதர் என பன்முகங் கொண்ட அவருடைய மறைவு திரையுலகிற்கு , அரசியல் களத்திற்கு, அன்புள்ளங்களை தேடுவோர்க்கு ஒரு பேரிழப்பு. தனிப்பட்ட முறையில் எனக்கு என்னை நேசித்த, நான் நெஞ்சில் வைத்து நெகிழ்ந்த நல்ல உறவை இழந்த ஆறாத்துயரம்” என்று குறிப்பிட்டுள்ளார் திருச்சி சிவா.
–வேந்தன்
“வாழ்வில் மறக்க முடியாத ஒரு நல்ல மனிதர்” : நெப்போலியன்
இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்… கேப்டன் விஜயகாந்திற்கு திரையுலகினர் இரங்கல்!