திமுக எம்.எல்.ஏ. கருணாநிதி மகன், மருமகள் இருவரும் தங்கள் வீட்டில் வேலை பார்த்த ரேகா என்ற இளம் பெண்ணை கொடுமைப்படுத்தியதாக சர்ச்சை வெடித்த நிலையில் இருவரும் தலைமறைவானார்கள். உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டபோது விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டார் நீதிபதி.
அதையடுத்து இருவரும் நேற்று (ஜனவரி 25) மாலை ஆந்திரா எல்லையில் போலீசாரிடம் சரணடைந்த நிலையில் இன்று அதிகாலை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் இருவரையும் சரணடைய சொல்லி கட்சித் தலைமை அழுத்தம் கொடுத்ததாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆண்டோ மதிவாணன் மெர்லினாவை கைது செய்யப்பட்டது குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தபோது முக்கியமான பல தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
“எஸ்.சி. எஸ்.டி வழக்கு இருவர் மீதும் பதியப்பட்டுள்ளதால் முன் ஜாமீன் கிடைப்பது அவ்வளவு எளிதானது அல்ல. இதனால் திமுக தலைமையிடம் இருந்து எம்.எல்.ஏ. கருணாநிதிக்கு, தலைமறைவாக இருந்த இருவரையும் சரண்டராக சொல்லி அழுத்தம் கொடுக்கப்பட்டது.
அதனால் நேற்று தனது மனைவி ஸ்டெல்லாவிடம் சொல்லி, ஆந்திரா மாநிலத்தில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்கியிருந்த மகனையும், மருமகளையும் போலீசிடம் சரணடைய சொல்லியுள்ளார் கருணாநிதி.
இதனால் ஆண்டோ மதிவாணன், மெர்லினா இருவரும் சென்னைக்கு புறப்பட்டனர். அவர்களுக்காக தமிழ்நாடு எல்லையான கும்மிடிப்பூண்டி அருகில் அடையாறு ஏசி தலைமையிலான தனிப்படையினர் காத்திருந்தனர். நேற்று மாலை கும்மிடிப் பூண்டியை அடைந்த ஆண்டோ மதிவாணன் போலீஸ் வாகனத்தைப் பார்த்ததும் தனது வண்டியை விட்டு இறங்கிச் சென்று போலீஸாரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். மதிவாணனையும் மெர்லினாவையும் அவர்களது காரிலேயே முன்னே போகச் சொன்ன போலீஸார் அவர்களைப் பின் தொடர்ந்தனர்.
அவர்களை கைது செய்து அழைத்துகொண்டு இரவு 12 மணியளவில் எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள நீதிபதி அல்லி இல்லத்துக்கு அழைத்துச் சென்றனர் போலீசார். அவர் இல்லாததால் பொறுப்பு நீதிபதி டி.வி. ஆனந்த் வீட்டுக்கு அழைத்துச் சென்றபோது, ‘காலையில் அழைத்து வாருங்கள்’ என்று சொல்லிவிட்டார்.
அதனால் இன்று காலை 6 மணியளவில் நீதிபதி டி.வி.ஆனந்த் வீட்டுக்கு அழைத்து சென்றனர். அப்போது, உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு நகலை காண்பித்தனர். எஸ்.சி., எஸ்.டி வழக்கில் கைது செய்யப்பட்ட சேலம் பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு ஜாமீன் வழங்கியதை சுட்டிக்காட்டி ஜாமீன் கேட்டனர்.
இதை விசாரித்த நீதிபதி ஜாமீன் வழங்க மறுப்புத் தெரிவித்து, 15 நாள் நீதிமன்ற காவல் விதித்தார்.
இதனிடையே, ஆண்டோ மதிவாணன், மெர்லினாவை கைது செய்து அழைத்து வந்த போலீசார், ‘உண்மையில் என்ன நடந்தது’ என இருவரிடமும் விசாரித்தனர்.
அப்போது அவர்கள், “நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. சித்ரா என்ற புரோக்கர் மூலமாகத்தான் ரேகாவை வீட்டு வேலைக்கு அழைத்து வந்தார் எனது அக்கா. கடந்த 7 மாதமாக எங்கள் வீட்டு பிள்ளையாகத்தான் ரேகாவை பார்த்து வந்தோம். கடந்த டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் அன்று ரேகாவுக்கு பிறந்தநாள். அதையும் சிறப்பாக கொண்டாடினோம்.
ரேகா ஒருவரை காதலித்து வருகிறார். ஆனால் ரேகாவை இன்னொருவர் ஒருதலை பட்சமாக காதலித்து வருகிறார். எப்போதும் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததால் ரேகாவின் பெற்றோரிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தோம்.
உடனடியாக அவரது பெற்றோர்கள், ‘என் மகள் பயன்படுத்தும் செல்போனை பிடுங்கி வைத்துக்கொள்ளுங்கள். அவளிடம் செல்போனை கொடுக்காதீர்கள்’ என்றனர். அதனால் ரேகாவின் செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டோம்.
ரேகாவின் செயல்பாடுகளை பற்றி வேலைக்கு அமர்த்திய புரோக்கர் சித்ராவிடமும் சொன்னோம். அவர், அறிவுரை வழங்கிய போது, ‘நான் யாரிடம் வேண்டுமானாலும் பேசுவேன். என் செல்போனை பிடுங்கி வைத்துக்கொள்ள இவர்கள் யார்? என்று கேட்டுள்ளார் ரேகா.
எங்களுடன் இருக்கும் போது மகிழ்ச்சியாகதான் இருந்தார் ரேகா. நாங்கள் பொங்கல் விடுமுறைக்காக ஏற்காடு சென்றோம். ரேகாவையும் அழைத்து சென்று ஒரு நாள் தங்கினோம். ஜனவரி 18ஆம் தேதி ரேகாவின் சொந்த ஊருக்கு சென்ற போது, வழியில் ஒரு டீக்கடையில் நின்று டீ குடித்தோம். அப்போதெல்லாம் எங்களிடம் சிரித்துதான் பேசிக்கொண்டிருந்தார்.
இந்த சுற்றுலா பயணத்தில் அவர் எங்களுடன் மகிழ்ச்சியாக இருந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள், பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் எல்லாம் எங்களிடம் இருக்கிறது.
அப்படிப்பட்ட ரேகா எங்கள் மீது புகார் கொடுத்து வழக்குப்பதிவு செய்யும் அளவுக்கு அவர் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது’ என்று வேதனையுடன் கூறினர்” என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வணங்காமுடி