பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன் மருமகள் ஜாமீன் கேட்டுத் தொடர்ந்த வழக்கில், அவர்கள் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண் பதிலளிக்க நீதிமன்றம் இன்று (ஜனவரி 31) உத்தரவிட்டது.
சென்னை பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் ஆண்டோ மதிவாணன், மருமகள் மெர்லினா வீட்டில் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ரேகா என்ற இளம் பெண் பணியாற்றி வந்தார்.
அப்போது, மெர்லினா மற்றும் குடும்பத்தினர் தன்னை அடித்து துன்புறுத்தியதாக நீலாங்கரை போலீசில் ரேகா புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் ஆண்டோ மதிவாணன் மற்றும் மெர்லினா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து தலைமறைவான இருவரும், கடந்த ஜனவரி 25ஆம் தேதி தமிழ்நாடு – ஆந்திரா எல்லையில் தனிப்படை போலீசாரிடம் சரண் அடைந்தனர்.
அவர்களைக் கைது செய்து அழைத்து வந்த போலீசார், பிப்ரவரி 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில்ஆண்டோ மதிவாணன், மெர்லினா இருவரும் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அதில், “பணிப்பெண்ணைத் தாக்கியதாகவும் துன்புறுத்தியதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. அவரை தங்களது குடும்ப உறுப்பினர் போல தான் நடத்தினோம். அவர் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கான கட்டணத்தையும் நாங்களே செலுத்தினோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி விடுமுறை என்பதால் இம்மனு நீதிபதி ஆனந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.சுதாகர் ஆஜராகி, “எஸ்.சி., எஸ்.டி பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பதிலை கேட்க வேண்டும். இதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
இதை ஏற்று இருவரின் ஜாமீன் மனுவுக்கு காவல்துறையும், பாதிக்கப்பட்ட பெண்ணும் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையைப் பிப்ரவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ஜம்மு, காஷ்மீரில் பாதுகாப்பான சூழல்: திரவுபதி முர்மு உறுதி!
திரிஷா விவகாரம் – ரூ. 1 லட்சம் அபராதம்: மன்சூர் அலிகானுக்கு தடை விதிக்க மறுப்பு!