பணிப்பெண்ணை தாக்கிய புகாரில் கைதான திமுக எம்.எல்.ஏ மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா ஆகியோருக்கு பிப்ரவரி 9 வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.
திருவான்மியூரில் வசித்து வந்த பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா ஆகியோர் தங்கள் வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக நீலாங்கரை காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
காவல்துறை வழக்குப்பதிவு செய்ததை தொடந்து, ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் தலைமறைவானார்கள். அவர்களை பிடிப்பதற்காக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்தநிலையில், ஆந்திராவில் பதுங்கி இருந்த இருவரையும் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.
நேற்று இரவு இருவரும் சென்னை அழைத்து வரப்பட்டு, எழும்பூர் நீதிமன்ற குடியிருப்பில் உள்ள மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பிப்ரவரி 9-ஆம் தேதி வரை இருவரையும் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.
இருவரும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சரணடையும் நாளிலேயே ஜாமீன் மனுவை பரிசீலித்து சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: கைகளில் அரிப்பு, எரிச்சல், வறட்சி.. தீர்வு என்ன?
