காது குத்து யாருக்கு? : திமுக எம்.எல்.ஏ. மொய் விருந்து குறித்து அண்ணாமலை விமர்சனம்!

Published On:

| By Selvam

திமுக சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் நடத்திய மொய் விருந்தில், விஞ்ஞானப்பூர்வ ஊழல் நடந்திருப்பதாகவும், அவர் திமுக தலைமையையே மிஞ்சிவிட்டதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் நடத்திய மொய் விருந்தில் ரூ.10 கோடி மொய் பணம் வசூலானது.

ADVERTISEMENT

தனது பேரப்பிளைகள் காதணி விழாவுடன் மொய் விருந்தையும் சேர்த்து அவர் நடத்தியிருக்கிறார்.

100 ஆடுகளை வெட்டி, மட்டன் குழம்பு, குடல் கிரேவி, சிக்கன் ரோஸ்ட் மற்றும் வடை பாயாசத்துடன் சைவ உணவு என 8000 பேருக்கு விருந்தளித்தார்.  

ADVERTISEMENT

இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி திமுக எம்.எல்.ஏ., நடத்திய மொய் விருந்தில், பதினோரு கோடி ரூபாய்க்கும் மேலே, மகசூல் அமோகம்.

இத்தனை பெரிய அறுவடையை நிகழ்த்திக் காட்டிய தனியாள் இதுவரை யாரும் இல்லை. வாழ்வதற்கு வழியில்லாமல், பண முடையில் சிக்கித் தவிப்பவர்கள், வட்டிக்கு பணம் வாங்காமல் வாழ்விலே மீண்டு வர கடைசி வாய்ப்பு என்பது மொய் விருந்து நடத்துவது.

ADVERTISEMENT

அதைத் தன் சுய லாபத்திற்காக, 100 ஆடுகளை வெட்டி மட்டன் குழம்பாக, குடல் கிரேவி, சிக்கன் ரோஸ்ட் என தடபுடலாக 8,000 பேருக்கும் மேலே விருந்து வைத்து தூள் கிளப்ப, அசைவச் சாப்பாடும், சைவச்சாப்பாடும் பரிமாறியிருக்கிறார் திமுக எம்.எல்.ஏ. அசோக் குமார்.

ஆனால், இந்த விருந்தின் சுவையான பகுதியே மொய்க்கான ஏற்பாடுகள் தான். சுமார் 40 மொய் வாங்கும் கவுண்டர்கள், கட்டுக்கட்டாக வரும் பணத்தை, கவனமாக எண்ணிப் பார்க்க, பணம் எண்ணும் இயந்திரம், அதை உடனடியாக வங்கிக் கணக்கில் சேர்க்க, வங்கி அதிகாரிகள், என்று குட்டி ரிசர்வ் வங்கி போல மொய் வசூல் மையம் நடத்தப்பட்டுள்ளது.

வியப்பளிக்கிறதா? இல்லையா? மொய் விருந்துக்கு வந்தவர்கள் அனைவரும் ரூ.1,000 -ல் தொடங்கி ரூ.5 லட்சம் வரை அவரவர் வசதிக்கேற்ப மொய் செய்துள்ளனர் இது சத்தியமா? சாத்தியமா? அங்கே தான் இருக்கிறது திமுகவின் விஞ்ஞானபூர்வ ஊழல் திறமை.

இரண்டு இலட்சத்திற்கு மேல் காசோலைகளைத்தான் பயன்படுத்த வேண்டும். வீட்டில் அதிக கரன்சிகளை வைப்பது குற்றம். வங்கியில் ரூ.50,000 க்கும் மேல் செலுத்த வருமானவரித்துறை கேள்வி கேட்கும்.

குவிந்திருக்கும் கருப்புப் பணம் வெள்ளையாக வேண்டும் என்று சாமானிய மக்களுக்கு சொல்லுது சட்டம். ஆனால் அசோக் குமார் அடிச்சது, ஒரே கல்லில் அஞ்சாறு மாங்காய்.

dmk mla ashok kumar

சாப்பிட்ட ஊருக்காரனும் ஹாப்பியில், சாப்பிட முடியாத கருப்புப் பணமும் ஜோப்பியில், இந்த விஞ்ஞானபூர்வ வித்தைகள் காட்டும் வித்தகத்தில், தலைமயையே விஞ்சும், கைதேர்ந்த திறமைசாலிகள் திமுகவினர்.

இப்படித்தான் சமீபத்தில் தி.க தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு எடைக்கு எடை, மக்கள் வழங்கும் கரன்சிகள் துலாபாரத்தில் வைக்கப்பட்டது.

கரன்சிக்கு எதிர் முனையில் தலைவர் அமர்ந்த தராசை ஒருவர் முட்டிக்காலால் முட்டுக் கொடுத்தது சமூக ஊடகத்தில் வைரல் ஆனது.

மக்களையும், அரசையும் முட்டாளாக நினைக்கும் இவர்களின் கூட்டுக் கொள்ளைகள், இப்போதுதான் வெளிச்சப்படுகிறது.

மக்களுக்குப் புரியத் தொடங்கிவிட்டது. உண்மையான ஊழலற்ற தமிழகத்திற்கான விடியல் ஆட்சி, எப்போது வரும் என ஏக்கத்துடன், விருந்துகளையும், துலாபாரத்தையும், மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.”

என்று அண்ணாமலை திமுக சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமாரை காட்டமாக விமர்சித்துள்ளார்.

செல்வம்

போட்டோவுக்காக ராணுவ புரோட்டகாலை மீறினாரா அண்ணாமலை?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share