“தமிழகத்தை பின்னடைவுக்கு தள்ளிய திமுக”: எடப்பாடி கண்டனம்!

Published On:

| By Monisha

DMK left tamilnadu in backward

திமுக அரசு கடந்த 27 மாத கால ஆட்சியில் தமிழகத்தை பல்வேறு துறைகளில் பின்னடைவில் நிறுத்தியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று (ஆகஸ்ட் 3) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக மக்களிடம் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து, அவர்களின் மனதில் ஆசையைத் தூண்டி பின்புற வாசல் வழியாக ஆட்சியைப் பிடித்த மக்கள் விரோத திமுக அரசு, கடந்த 27 மாத கால ஆட்சியில் தமிழகத்தை பல துறைகளில் பெரும் பின்னடைவில் நிறுத்தியுள்ளது.

சட்டம்-ஒழுங்கை பேணிக் காப்பதில் பின்னடைவு. கொலை, கொள்ளை, வழிப்பறி, முதியவர்களை குறிவைத்துத் தாக்குதல் உள்ளிட்ட அனைத்து குற்றச் செயல்களும் அதிகரிப்பு.

போக்சோ குற்றங்கள் அதிகரித்து, பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுந்த மாநிலம் தமிழ்நாடு இல்லை என்ற அவப்பெயர்.
காவல் நிலைய மரணங்களில் தென்னிந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருப்பதாக, மத்திய குற்ற ஆவணக் காப்பகம் நேற்று (ஆகஸ்ட் 2) தெரிவித்துள்ளது;

உடல் உறுப்பு தானம் செய்வதில் முதலிடத்தைத் தவறவிட்டது.

27 மாத ஆட்சியில், இதுவரை ஒரு புதிய பேருந்து கூட வாங்காமல், போக்குவரத்துக் கழகங்களை சீரழித்த அவலம்.

அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் கடும் விலை உயர்வு.

நில மதிப்பு அதிகரிப்பு, பொது பதிவுகளுக்கான கட்டணங்கள் உயர்வு உட்பட அரசின் அனைத்துக் கட்டணங்களும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

அரசின் வரி வருவாய் பல மடங்கு அதிகரித்தும், நிதி நிர்வாக குளறுபடியால் இரண்டு ஆண்டுகளில் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் புதிய கடன்.

தாலிக்குத் தங்கம், அம்மா இருசக்கர வாகன மானியம், தாய் சேய் நலப் பெட்டகம் மற்றும் நிதியுதவி, மாணாக்கர்களுக்கு மடிக் கணினி என்று ஏழை, எளியவர்களுக்கு அம்மா அரசில் வழங்கப்பட்ட பல நிதியுதவித் திட்டங்கள் நிறுத்தப்பட்டன.

தேர்தல் சமயத்தில் அறிவித்த, நேரடியாக பணப் பயன் அளிக்கக்கூடிய வாக்குறுதிகள் ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை.

ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தமிழக மக்களின் தலையில் சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் பொருட்கள் விலை உயர்வு என்று பலவித சுமைகளை சுமத்தியது இந்த திமுக அரசு.

அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கைவிரித்த திமுக அரசு.

இப்படி, திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து தமிழகம் புதை குழிக்குள் சென்றதை அடுக்கிக்கொண்டே போகலாம்.

குறிப்பாக, நேரடி அன்னிய முதலீட்டை ஈர்ப்பதற்காக ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் இரண்டு முறை வெளிநாடு சென்று வந்த பொம்மை முதலமைச்சர், ‘அம்மாவின் ஆட்சியில் 2020-2021ல் அன்னிய நேரடி முதலீடு ஈர்த்தலில் 3-ஆவது இடத்தில் இருந்த தமிழகத்தை, 2022-23ல் 27.7 சதவீதம் குறைவாக அன்னிய முதலீட்டை ஈர்த்து, 8-ஆவது இடத்திற்கு பின்னுக்குத் தள்ளியதுதான் நிர்வாகத் திறனற்ற முதலமைச்சரின் சாதனை’.

மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) புள்ளி விவரங்களின்படி எனது தலைமையிலான அரசில், ஏப்ரல் 2020 முதல் செப்டம்பர் 2020 வரை ஆறே மாதங்களில், (கொரோனா காலகட்டத்தில்) தமிழகத்திற்கு வரப்பெற்ற அன்னிய நேரடி முதலீடு ரூ. 1,97,582 கோடி ஆகும். அதாவது, 31,140 மில்லியன் அமெரிக்க டாலர்.

2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி, 2,354 கோடி ரூபாய் முதலீட்டில், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில், சுமார் 500 ஏக்கர் நிலப் பரப்பில் உலகத்திலேயே மிகப் பெரிய மின்சார இருசக்கர வாகன தொழிற்சாலையை “ஓலா” நிறுவனம் நிறுவ ஆரம்பித்தது என்றும்,

இங்கு தயாரிக்கப்படும் மின்சார இருசக்கர வாகனங்கள் 2022-ல், வாகன சந்தையில் விற்பனைக்கு வர உள்ளன என்றும், கடந்த 2021 மார்ச் 9-ஆம் தேதி, ஒலா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

அதிமுக அரசால் கொண்டு வரப்பெற்ற இந்தத் திட்டத்தை, திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 50 நாட்களில் “ஒலா” நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் போட்டு, ஓலா இரு சக்கர வாகன தொழிற்சாலையை, தான் கொண்டு வந்தது போல் பொம்மை முதலமைச்சர் தம்பட்டம் அடித்துக்கொண்டு பேசுவது “அடுத்தவர்கள் பெற்றெடுத்த குழந்தைக்கு சொந்தம் கொண்டாடுவது போலாகும்” என்று 5.7.2021 நாளிட்ட அறிக்கையில் நான் கடுமையாகக் கண்டித்திருந்தேன்.

தமிழகத்தை சொர்க்கபுரி ஆக்கிவிட்டோம் என்றெல்லாம் படம் காட்டும் வேலையில்தான் திமுக அரசு ஈடுபட்டு வருகிறதே தவிர, தமிழகத்திற்கு இந்த ஆட்சியாளர்கள் கொண்டு வந்ததாகக் கூறப்பட்ட அனைத்து முதலீடுகளும் காகிதங்களில்தான் உள்ளதே தவிர, நிஜத்தில் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை.

இதனால், இந்த திமுக ஆட்சியாளர்களை காகிதப் புலிகள் என்று மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள்.

தமிழகத்திற்கு அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு இரண்டுமுறை சுற்றுப் பயணம் செய்ததாக தம்பட்டம் அடிக்கும் முதலமைச்சர், அவர் குறிப்பிட்டதைப் போல் எந்தவொரு முதலீட்டையும் கொண்டுவந்ததாகத் தெரியவில்லை. இந்த ஆட்சியில் மக்கள், ஏமாறியதுதான் அவர்கள் கண்ட பலன்.

எனவே, 2024-ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரம் திமுக அரசு நடத்த உள்ள உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டிலாவது, “கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்” ஆகியவற்றை விட்டுவிட்டு, தமிழக மக்களின் நலனுக்கான திட்டங்களையும், அதற்கான முதலீடுகளையும் ஈர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

வழக்கம்போல் இனிப்பு என்று கூறி தமிழக மக்களின் நாவில் விஷம் தடவும் வேலையை இந்த ஆட்சியாளர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மோனிஷா

புறக்கணித்த சபாநாயகர்: அழைப்பு விடுத்த எதிர்க்கட்சிகள்!

ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் யாதவ் சிறை தண்டனை நிறுத்திவைப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share