நெல்லை மாநகராட்சி தேர்தலில் திடீரென ஏற்பட்ட போட்டியில் திமுக தலைமை பரிந்துரைத்த கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் வெற்றி பெற்று மேயராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதே நேரம் இந்த மேயர் தேர்தலில் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட பவுல்ராஜ் என்ற கவுன்சிலர் போட்டியிட்டது நெல்லை மாநகராட்சியில் அதிருப்தி அலைகள் ஓயாது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
இன்று (ஆகஸ்டு 5) நடந்த மேயர் தேர்தலில் கவுன்சிலர்கள் வாக்களித்தனர். இதில் திமுக கூட்டணிக்கு 51 கவுன்சிலர்கள் இருக்கிற நிலையில், திமுக தலைமை அறிவித்த மேயர் வேட்பாளரான கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் 30 ஓட்டுகளை மட்டுமே பெற்றார். அவரை எதிர்த்து திமுகவிலிருந்து நீக்கப்பட்டவரான பவுல்ராஜ் போட்டியிட்டு 23 ஓட்டுகள் பெற்றிருக்கிறார். ஆக திமுகவில் பல கவுன்சிலர்கள் புதிய மேயர் கிட்டு மீதும் அதிருப்தியில் இருப்பது உறுதியாக வெளிப்படுகிறது.
நெல்லை திமுக வட்டாரத்தில் யார் இந்த கிட்டு என்கிற ராமகிருஷ்ணன், யார் இந்த பவுல் ராஜ் என்று விசாரித்தோம்.
நம்மிடம் பேசிய நெல்லை திமுகவினர்,
“மேயர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் 2001 இல் நெல்லை டவுன் திமுகவில் வட்ட பிரதிநிதியாக இருந்தவர். அப்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கடலை மணி வார்டு கவுன்சிலராக டவுன் பகுதியில் போட்டியிட்டார். அவர் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர். ஆனால் அந்தப் பகுதியில் பிள்ளைமார் சமுதாய வாக்குகள் கணிசமாக உள்ளன. திமுக சார்பில் அதிகாரப்பூர்வமாக போட்டியிட்ட வேட்பாளர் பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.
திமுக வேட்பாளரைத் தோற்கடிக்க வேண்டுமானால் பிள்ளைமார் சமுதாயத்திலிருந்து இன்னொரு திமுக போட்டி வேட்பாளரை நிறுத்தினால் தான் முடியும் என்ற நிலையில்தான் கடலை மணியின் கண்ணில் பட்டார் கிட்டு.
அடுத்தடுத்து நடந்த பேர பேச்சுவார்த்தைகளின் முடிவில் அதிகாரப்பூர்வ திமுக வேட்பாளரை எதிர்த்து உலக உருண்டை சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டார் கிட்டு என்கிற ராமகிருஷ்ணன். பிள்ளைமார் சமுதாய ஓட்டுகள் ரெண்டு பட்டதால் கடலை மணி வெற்றி பெற்றார்.
இப்படி 2001 இல் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை வெற்றி பெற வைப்பதற்காக திமுக வேட்பாளரை எதிர்த்து அதிருப்தி வேட்பாளராக நின்றவர் தான் இன்றைக்கு மேயர் ஆகி இருக்கக்கூடிய கிட்டு.
இதேபோல மீண்டும் ஒரு முறை திமுக வேட்பாளரை எதிர்த்து அதிருப்தி வேட்பாளராக களமிறங்கினார் கிட்டு. அதன்பிறகு கிட்டுவை அதிருப்தி வேட்பாளராக வைத்திருப்பதை விட அதிகாரப்பூர் வேட்பாளராக ஆக்கிவிடலாம் என்று கருதி அவரையே கவுன்சிலர் ஆக்கியது திமுக. இதுதான் கிட்டுவின் அரசியல் அறிமுகம்.
மூன்றாம் வகுப்பு வரையே படித்தவர், ஆனாலும் நடைமுறை அரசியலில் பி.ஹெச்.டி. முடித்தவர். சைக்கிளில் தனது வார்டு முழுவதும் சென்று மக்களோடு நேரடி தொடர்பில் இருப்பவர் கிட்டு. இவருக்கென்று குடும்பம் இல்லாததால் முழு நேரமாக கட்சிப் பணியே செய்து கொண்டிருப்பார் என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள்.
பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்த சரவணனுக்கு பதிலாக அதே சமுதாயத்தை சேர்ந்த இன்னொருவரை மேயராக வேண்டும் என்ற ஒரே ஒரு அடிப்படையில் மட்டும் கிட்டு இப்போதும் மேயர் ஆக்கப்பட்டிருக்கிறார்.
அது சரி… திடீரென போட்டியிட்டிருக்கும் பவுல் ராஜ் யார்? அவருக்கு எப்படி 23 ஓட்டுகள் கிடைத்தன?
கிட்டு எப்படி எம்.எல்.ஏ. வஹாப்பின் தீவிர ஆதரவாளரோ அதேபோலத்தான் பவுல்ராஜும் வஹாப்பின் தீவிர ஆதரவாளர்.
மேயராக இருந்த சரவணன் தனக்கு சரிப்பட்டு வரவில்லை என்றதும்… அவருக்கு எதிராக கவுன்சிலர்களை ஒருங்கிணைத்தார் நெல்லை மத்திய மாசெ. ஆக இருந்த அப்துல் வஹாப். இந்த நிலையில், கடந்த 2023 மே 21 ஆம் தேதி அப்துல் வஹாப் நெல்லை மத்திய மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து மேயர் சரவணனுக்கு எதிராக போராட்டம் நடத்த தனது தீவிர ஆதரவாளரான கவுன்சிலர் பவுல்ராஜை தேர்ந்தெடுத்தார் அப்துல் வஹாப்.
பவுல்ராஜ்தான் மாநகராட்சி மன்றத்திலேயே மேயர் சரவணனுக்கு எதிரான போராட்டங்களைத் தீவிரமாக நடத்தியவர். 2023 நவம்பர் 21 ஆம் தேதி பவுல்ராஜ் தலைமையில் திமுக கவுன்சிலர்கள் மாநகராட்சி குறைதீர்ப்பு முகாமின்போதே மேயர் சரவணனுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். அத்தோடு மேயர் சரவணனுக்கு எதிராக மாநகரம் முழுதும் போஸ்டர்களையும் ஒட்டினார்கள்.
அப்துல் வஹாப் மாசெ பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும், அவரது தூண்டுதலின் பேரில்தான் தன்னை எதிர்த்து திமுக கவுன்சிலர்கள் 20 பேர் போராட்டம் நடத்தினார்கள் என மேயராக இருந்த சரவணன் தலைமையிடம் புகார் செய்தார்.
இந்நிலையில் மறுநாள் 2023 நவம்பர் 22 ஆம் தேதியே பவுல்ராஜ் உள்ளிட்டோர் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனாலும் பவுல்ராஜ் உள்ளிட்ட கவுன்சிலர்கள் அப்துல் வஹாபை தீவிரமாக நம்பினர்.
இந்நிலையில் மேயர் தேர்தலை நடத்த தலைமை முடிவு செய்ததை அடுத்து, பவுல்ராஜ் எம்.எல்.ஏ.வான வஹாபை சந்தித்து, ‘உங்களுக்காகத்தான் அவ்வளவு போராட்டம் செய்து கட்சியிலேர்ந்து நீக்கப்பட்டேன். இப்ப என்னை கட்சியில் சேர்த்து மேயர் வேட்பாளர் ஆக்குங்க’ என்று கோரிக்கை வைத்தார்.
ஆனால் வஹாபோ, ‘பிள்ளைமாருக்குத்தான் மறுபடியும் மேயர்னு தலைமை தெளிவா இருக்காங்க. நீங்க நாடார். எப்படி தலைமை இதை செய்யும். தவிர சஸ்பெண்ட்ல இருக்கும்போது கட்சியில சேர்த்து மேயர் வேட்பாளரா அறிவிக்கிறது அவ்வளவு சுலபம் இல்லை’ என்று சொல்லியிருக்கிறார்.
இதையடுத்து பவுல்ராஜ் தனது ஆதரவு கவுன்சிலர்களைத் திரட்டி, ‘ஏற்கனவே வஹாப் தலையிட்டதாலதான் மாநகராட்சி முடங்கி போயிருச்சு. இதை மறுபடியும் அனுமதிக்கக்கூடாது’ என்று புது ரூட் போட்டிருக்கிறார்.
நேற்று இரவு மேயர் வேட்பாளர் கிட்டு ராமகிருஷ்ணன் சார்பில் கவுன்சிலர்களுக்கு விருந்து வைக்கப்பட்டு ஒவ்வொரு கவுன்சிலருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த விருந்தில் கலந்துகொண்ட பவுல்ராஜின் தீவிர ஆதரவு கவுன்சிலர்களான பாலையா, சுந்தர் ஆகியோர் கிட்டுவிடம், ‘நீங்க மேயரானவுடன் கவுன்சிலர்களை அனுசரிச்சு போகணும்., பழையபடி வஹாப் பேச்சை கேட்டு நடந்துக்கக் கூடாது. அதுக்கு உத்தரவாதம் கொடுங்க. நாங்க எல்லாரும் உங்களுக்கு சப்போர்ட் பண்றோம்’ என்று பவுல்ராஜ் சார்பில் பேசியிருக்கிறார்கள்.
ஆனால் கிட்டுவோ, ‘இந்த பதவியை வாங்கிக் கொடுத்ததே வஹாப் அண்ணன் தான். அவர் சொல்றபடிதான் மாநகராட்சி நடக்கும்’ என்று அவர்களுக்கு பதில் சொல்லியிருக்கிறார்.
இதையடுத்துதான் இன்று காலை திடீரென மேயர் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தார் பவுல்ராஜ். திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பவுல்ராஜ் மேயர் தேர்தலில் போட்டியிட்டு 23 வாக்குகளை பெற்றிருக்கிறார். அது அறிவாலயத்தையே அதிர வைத்துள்ளது. இது குறித்து மீண்டும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது அறிவாலயம்.
வஹாப் அணியே இரண்டாக உடைந்துவிட்டது என்று ரிப்போர்ட் போயிருக்கிறது மேலிடத்துக்கு.
மேயருக்கு 30 ஓட்டுகள், எதிர்த்து நின்ற பவுல்ராஜுக்கு 23 ஓட்டுகள் என்றால் இனி மிச்சமிருக்கும் காலம் மாநகராட்சி சுமுகமாக நடக்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள் நெல்லை திமுகவினர்.
–வேந்தன்
தாய்ப்பால் விழிப்புணர்வு… புதிய தாய்மார்களுக்கு உதவி எண்!
செந்தில் பாலாஜி வழக்கு : இப்படி கேட்பது சரியல்ல – ED மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி!