கோயம்புத்தூரில் அண்ணாமலையை தோற்கடிக்க திமுக வேலையே செய்யவில்லை என்று பிரச்சாரத்தின் போது சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்தோஷ்குமாரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுராந்தகம் பகுதியில் இன்று (ஏப்ரல் 16) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “அதானியிடம் இருப்பதெல்லாம் மோடியின் பணம் என்று பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தூக்கி சிறையில் போட்டு விட்டார்கள். அதே கருத்தை நானும் பேசுகிறேன். என்னை அதேபோன்று சிறையில் அடையுங்கள் பார்ப்போம்?
எங்கெங்கு அமலாக்கதுறை ரெய்டு நடத்தியதோ, அந்த நிறுவனங்களை எல்லாம் மிரட்டி பணம் பறித்துள்ளது பாஜக. லாட்டரி மார்ட்டினிடம் திமுக, பாஜக பணம் பறித்துள்ளது.
கோயம்புத்தூரில் அண்ணாமலையை தோற்கடிக்க திமுக வேலையே செய்யவில்லை. ’வேலை செய்யாதீங்க’ என திமுக நிர்வாகிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை மறுப்பார்களா? திருப்பூரில் கூட்டம் போட்ட ஸ்டாலின், ஏன் கோவையில் நடத்தவில்லை?
அதிமுக கோவையில் ஒன்றுமே செய்யவில்லை. மொத்தமாக படுத்துவிட்டது. எஸ்பி வேலுமணி அந்த தொகுதியிலேயே இல்லை.
ஆ.ராசாவை தவிர திமுகவில் நிற்கும் ஒரு வேட்பாளர் கூட பாஜகவை எதிர்த்து பேசவில்லை.
தூத்துக்குடியில் கனிமொழி ஜெயிப்பதற்காக, தமாகாவுக்கு சீட் கொடுத்து பாஜக டம்மி வேட்பாளரை இறக்கியுள்ளது. அதே போல, அண்ணாமலை ஜெயிப்பதற்காக டம்மி வேட்பாளரை திமுக களமிறக்கியுள்ளது. இதுதான் இருகட்சிகளிடையே உள்ள ஒப்பந்தம்.
செஸ் ஒலிம்பியாட், கேலோ நிகழ்ச்சிக்கு ஏன் பிரதமர் வர வேண்டும்? எந்த மாநிலத்தில் உள்ள விளையாட்டுத் துறை அமைச்சரை பிரதமர் மோடி தனியாக நேரம் கொடுத்து சந்தித்துள்ளார்? பாஜக ஆளும் மாநில விளையாட்டுத்துறை அமைச்சரை கூட மோடி சந்தித்ததில்லை. ஆனால் உதயநிதி டெல்லியில் சென்று மோடியை சந்தித்து பேசினார்” என்று சீமான் பேசியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
