ஏழைகளுக்கான திட்டத்தை எல்லாம் திமுக அரசு கைவிட்டுவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த வாரம் பெய்த கன மழையால், கடலூர், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், கடந்த 14ஆம் தேதி சீர்காழி சென்று முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிலையில் இன்று தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, கடலூர் – சிதம்பரம் தொகுதி வல்லம்படுகை கிராமத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு உதவிகளை வழங்கினார்.
இதன்பின் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆளும் கட்சியாக இருக்கும் போதும் சரி, எதிர்க்கட்சியாக இருக்கும் போதும் சரி மக்களுக்கு உதவி செய்யும். ஏழை மக்களுக்காகத் துவங்கப்பட்ட இயக்கம் இதுவாகும்” என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், “ஏழைகளுக்காக அம்மா மினி கிளினிக்கை கொண்டு வந்தோம். ஆனால் அதைப் பொறுத்து கொள்ள முடியாமல் திமுக அரசு மூடியது.
அம்மா கிளினிக் திட்டத்தைப் பெயர் மாற்றி கிராமப்புறத்திலிருந்ததை இன்று நகர்ப்புற மருந்தகம் என்ற பெயரில் திட்டத்தை நேற்று தொடங்கியுள்ளனர்.
வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுகவின் திட்டத்தை ஸ்டாலின் அரசாங்கம் முடக்குகிறது.
இந்த ஆண்டு 575 ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் எம்.பி.பி.எஸ் படிக்கிறார்கள் என்றால், அதற்கு அதிமுக அரசு கொண்டு வந்த 7.5 சதவிகித இட ஒதுக்கீடுதான் காரணம்.
நாங்கள் தான் பொங்கல் தொகுப்பு திட்டத்தை கொண்டு வந்தோம். ஆனால் இவர்கள் கடந்த ஆண்டு மறக்கவே முடியாத பொங்கல் தொகுப்பைக் கொடுத்துள்ளனர்” என்று விமர்சித்தார்.
மேலும் அவர், மடிக் கணினி, திருமண உதவித் திட்டம், சைக்கிள் திட்டம் என அதிமுகவின் அனைத்து திட்டத்தையும் திமுக அரசு கைவிட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
பிரியா
உயிரியல் பூங்காக்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள்: மு.க.ஸ்டாலின்
