தமிழ்நாட்டில் பீகார் மக்களை திமுக துன்புறுத்துகிறது என பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக குற்றம்சாட்டி இருப்பது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.
பீகார் தேர்தல் பிரசாரத்தில் பேசிய மோடி, கர்நாடகா- தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்கள், பீகார் மக்களை அவதூறு செய்கின்றனர். தமிழ்நாட்டில் கடினமாக உழைக்கும் பீகார் மக்களை திமுக துன்புறுத்துகிறது என பேசியுள்ளார்.
பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு திமுகவின் ஐடிவிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திமுக ஐடிவிங் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதாவது: தமிழர்கள் மீதும், தமிழ்நாட்டின் மீதும் மோடிக்கு இத்தனை காழ்ப்பும் வெறுப்பும் ஏன்?
குமரி முதல் இமயம் வரை விரிந்த இந்த இந்திய நாடு எத்தனையோ பிரதமர்களை பார்த்திருக்கிறது; ஆனால் மத, இன, மொழி, சாதிய அவதூறுகளை தேர்தல் வெற்றிக்காக மேடைகளில் பரப்புவதும், அதனையே முழு நேர தொழிலாக செய்யும் பிரதமரை இப்போது தான் இந்திய நாடு பார்க்கிறது.
முன்னதாக, உத்தரப் பிரதேச மக்களை இழித்தும் பழித்தும் தென்னிந்தியர்கள் பேசுவதாகத் தமிழ்நாட்டு மக்கள் மீது அபாண்டமான பழியைச் சுமத்தி இருந்தார் பிரதமர் மோடி.
பின்னர், ஒடிசா மாநில தேர்தல் பரப்புரையின் போது, பூரி ஜெகந்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் தொலைந்துபோன சாவிகள் தமிழ்நாட்டில் இருப்பதாகப் பேசி, தமிழர்களை திருடர்களாக சித்தரித்தார் பிரதமர் மோடி.
அப்போதே கடுமையான கண்டனங்களை தமிழ்நாடு எழுப்பிய போதும் அவர் திருந்தியதாக தெரியவில்லை. இப்போது மீண்டும் “தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்களை திமுகவினர் துன்புறுத்தி வருவதாக” தேர்தல் பிரச்சார மேடையிலேயே வெறுப்பு பேச்சை கக்கி இருக்கிறார்.
தமிழ்நாட்டின் கல்வி – வேலைவாய்ப்பு – சுகாதார கட்டமைப்பு இந்தியாவுக்கே முன்னோடியாக இருப்பதால்தான் பீகார் உள்ளிட்ட பல்வேறு வடமாநில தொழிலாளர்களும் இங்கே வருகின்றனர்; தமிழ்நாடு அரசு அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்தையும் கவனித்துக் கொள்கிறது. தமிழ்நாடு அரசையும், மாநிலத்தையும் அவர்கள் பாராட்டிய காணொளிகளும் ஏராளம் உண்டு.
இதனை எல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாமல், தேர்தல் பரப்புரையில் பேச கொள்கை – கோட்பாடுகள் – செயல்திட்டங்கள் எதுவும் இல்லாததால், வெறுப்புப் பேச்சுகளின் மூலம் வெற்றி பெறலாம் என மக்களிடையே பகை உணர்வையும் – மாநிலங்களுக்கு இடையே குரோதத்தையும் தூண்டி வருவது நாட்டுக்கு நல்லதல்ல! தமிழர்கள் மீது மோடிக்கு இத்தனை காழ்ப்பும் வெறுப்பும் ஏன்?
தமிழ்நாட்டுக்கு வந்தால் திருவள்ளுவரை பிடிக்கும், தமிழை, தமிழர்களை பிடிக்கும் என வேடம் போடுவதும், வெளி மாநிலங்களில் தமிழ்நாட்டு மக்களை திருடர்களாக, மோசமானவர்களாக இழித்தும் பழித்தும் பேசும் வழக்கத்தைப் பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ள வேண்டும்! இல்லையெனில் தமிழ்நாடு தக்க பாடம் புகட்டும்! இவ்வாறு திமுக ஐடிவிங் தெரிவித்துள்ளது.
