20 பொருட்களுடன் பொங்கல் பரிசு!

Published On:

| By Balaji

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது தொடர்பான அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் அரசின் சார்பில் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும். 2019ல் 1000 ரூபாய் ரொக்கத்துடன், பொங்கல் செய்வதற்குத் தேவையான பொருட்கள் மற்றும் வேட்டி சேலை வழங்கப்பட்டன. 2020 பொங்கல் பண்டிகையின் போது ரூ.2500 ரொக்கத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, திராட்சை, முந்திரி அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பும், ஒரு துண்டு கரும்புக்குப் பதிலாக ஒரு முழு நீளக் கரும்பும் வழங்கப்பட்டது. மொத்தம், 2.10 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கிட ரூ.5,604.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில், இந்த ஆண்டு பொங்கல் தொகுப்புடன், மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 17) அறிவித்துள்ளார்.

அந்த அறிவிப்பில், “வருகிற 2022ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும், கீழ்க்காணும் 20 பொருட்கள் அடங்கிய பொருட்கள் வழங்கப்படும்.

ADVERTISEMENT

இத்தொகுப்பில், பொங்கலுக்குத் தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை (20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) 2,15,48,060 குடும்பங்களுக்கு, மொத்தம் ஆயிரத்து 88 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ரூ.2500 ரொக்கம் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு பணம் வழங்கப்படுவது குறித்து அறிவிக்கப்படவில்லை. அதே சமயத்தில் முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றதும் கொரோனா நிவாரண நிதியாக குடும்பத்துக்கு ரூ.4000 வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share