100 நாள் வேலை திட்டம்- மகாத்மா காந்தி பெயரை நீக்க எதிர்ப்பு- மக்களவையில் திமுக நோட்டீஸ்!

Published On:

| By Mathi

MGNREGA

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கும் மத்திய அரசின் மசோதாவுக்கு திமுகவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விவாதிக்க கோரி திமுக மக்களவை குழு தலைவர் டிஆர் பாலு ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGA)- “100 நாள் திட்டம்” என்று அறியப்படும் இந்த மக்கள் நலத் திட்டத்தின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகி இருக்கிறது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.

ADVERTISEMENT

மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை “விக்சித் பாரத் கேரண்டி ஃபார் ரோஜ்கர் அண்ட் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) – விபி-ஜி ராம் ஜி” அல்லது “பூஜ்ய பாபு கிராமின் ரோஜ்கர் கேரண்டி யோஜனா” என மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த முயற்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது மகாத்மா காந்தி மீதான “வெறுப்பு” என்றும், “வாயில் நுழையாத வடமொழிப் பெயரை திணிப்பது” என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், இத்திட்டத்திற்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு 100% இல் இருந்து 60% ஆக குறைக்கப்படுவது குறித்தும் ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார். வறுமையை ஒழிப்பதில் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதால், திட்டத்தின் பலன்கள் தமிழ்நாட்டிற்குக் குறைவாகக் கிடைத்து, தமிழ்நாடு “தண்டிக்கப்படுகிறது” என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். நிலுவையில் உள்ள ரூ.4034 கோடி MGNREGA ஊதியத்தை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர்களும் மத்திய அரசின் பெயர் மாற்ற முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மல்லிகார்ஜுன கார்கே, கே.சி. வேணுகோபால், பிரியங்கா காந்தி உள்ளிட்டோர், இது மகாத்மா காந்திக்குச் செய்யப்படும் “அவமானம்” என்றும், “MGNREGA திட்டத்தை சிதைக்கும் பாஜக-ஆர்எஸ்எஸ் சதி” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

காந்தியின் “கிராம சுயராஜ்யம்” மற்றும் “ராம ராஜ்யம்” ஆகிய லட்சியங்களை புறக்கணிப்பதாக இது அமையும் என்றும் தெரிவித்துள்ளனர். புதிய மசோதா திட்டத்தின் “ஆன்மாவை” தாக்குவதோடு, மாநிலங்களின் நிதிச் சுமையையும் அதிகரிக்கும் என்று கவலை தெரிவித்துள்ளனர்.

விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார், “MGNREGS என்ற 100 நாள் வேலைத் திட்டத்தை மோடி அரசு ஒழித்துக்கட்டப் போகிறது என்பதை முன்னுணர்ந்து விசிக சார்பில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 7 இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினோம். நாம் எச்சரித்ததுபோலவே இப்போது மோடி அரசு அதை நீர்த்துப் போகச் செய்வதற்கு சட்டத் திருத்தம் கொண்டுவந்துள்ளது. மாநில அரசின் பங்கை 40% ஆக உயர்த்துதல், வளர்ச்சி பெற்ற மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீட்டைக் குறைத்தல் என இந்தத் திட்டத்தை முடக்குவதற்கு இந்த சட்டத் திருத்தம் வழிசெய்கிறது. கிராமப்புற மக்களுக்குத் தற்சார்பும், சிறிதளவு வருமானமும் கிடைத்திட இந்தத் திட்டம் கொஞ்சம் உதவியாக இருந்தது. அதையும் மோடி அரசு ஒழிக்கப் பார்க்கிறது. உழைக்கும் மக்களுக்கு எதிரான இந்தத் தாக்குதலை முறியடிப்போம்! வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறச் செய்ததுபோல் இந்த சட்டத் திருத்தத்தையும் திரும்பப் பெறச் செய்வோம்” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தி பெயரை நீக்கும் மசோதாவை மக்களவையில் இன்று மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இது தொடர்பாக விவாதிக்க கோரியும் திமுக மக்களவைக் குழு தலைவர் டிஆர் பாலு ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share