தமிழக அமைச்சரவையானது நேற்று (செப்டம்பர் 28) மாற்றியமைக்கப்பட்டது. விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டது.
அமைச்சரவையில் இருந்து செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ், கே.ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டனர். ஆவடி நாசர், செந்தில் பாலாஜி, கோவி.செழியன், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோர் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர்.
மேலும், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு வனத்துறையும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜூக்கு மனிதவள மேம்பாட்டுத்துறையும், வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பனுக்கு பால் வளத்துறையும், தங்கம் தென்னரசுவுக்கு நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறையும் ஒதுக்கப்பட்டது.
இந்தநிலையில், தமிழக அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ஆவடி நாசர், செந்தில் பாலாஜி, கோவி.செழியன், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோருக்கு ஆளுநர் ரவி இன்று பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
கிண்டி ராஜ்பவனில் நடந்த இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட கூட்டணி கட்சியின் தலைவர்கள் மற்றும் துணை முதல்வர் உதயநிதி, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைச்சர்களின் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“மதவாத, பாசிச அரசியலுக்கு எதிராக தொடர்ந்து களமாடுவேன்”… மனோ தங்கராஜ்