திமுகவும் எடப்பாடியும் 60:40 ரகசிய உறவு:தினகரன் தாக்குதல்!

Published On:

| By Balaji

கட்சி நிர்வாகிகளின் இல்ல விசேஷங்களுக்காக தமிழகம் முழுக்க சுற்ற ஆரம்பித்துவிட்டார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.

அந்த வகையில் அமமுகவின் துணைத் தலைவர் நாமக்கல் அன்பழகனின் மகள் சத்யவதி- மேகநாதன் திருமணத்தை இன்று (பிப்ரவரி 17) நாமக்கல்லில் நடத்தி வைத்தார் தினகரன்.

ADVERTISEMENT

இந்தத் திருமண விழாவில் பேசிய தினகரன், “திமுகவை என்றைக்கும் ஆட்சியில் அமரவிடக் கூடாது, அது தமிழர் நலனுக்கு எதிரானது என்பதை உணர்ந்து அம்மாவின் தொண்டர்கள் ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும். அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் ராணுவச் சிப்பாய்கள் போல அணிவகுத்தது, சசிகலாவை வரவேற்ற காட்சியைப் பார்த்தவர்களுக்கு தெரியும். அரசியலைத் தாண்டிய உறவோடு உணர்வோடு அவரை வரவேற்றது இந்தியாவையே வியப்போடு பார்க்க வைத்தது.

அமமுக டெல்டா, தென் மாவட்டங்களில்தான் இருக்கிறது என்று ஊடகங்களில் கோயபல்ஸ் பிரச்சாரம் செய்பவர்களை முறியடிக்கும் வகையில் தமிழகம் முழுக்க நாம் வலுவோடு இருப்பதை நிரூபிக்கும் வகையில் அந்த வரவேற்பு இருந்தது.

ADVERTISEMENT

எங்கள் ஊர் அமைச்சர் ஓ.எஸ். மணியன், ‘இந்த நான்கு ஆண்டுகளாக எங்களை திமுக ஒரு தொந்தரவும் பண்ணவில்லை. இந்த தினகரன் தான் தொந்தரவாக இருந்திருக்கிறார்’என்று சொல்கிறார். திமுக ஏன் தொந்தரவு செய்யவில்லை என்றால்…இந்த ஆட்சியும் திமுகவும் 60:40 உறவு வைத்திருந்தார்களா இல்லையா? கான்ட்ராக்ட் உள்ளிட்ட விஷயங்களில் திமுக எம்.எல்.ஏ. ஒருவருக்காவது இவர்கள் உதவி செய்யாமல் இல்லை. திமுக எம்.எல்.ஏ.க்கள் சிலரே என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.

’இந்த ஆட்சி இருந்துட்டுப் போகட்டும் சார்.எங்க ஆட்சி இருந்தா கூட இந்த அளவுக்கு எங்களுக்கு சலுகைகள்,சன்மானங்கள், வரவு கிடைக்காது. இந்த ஆட்சியில கான்ட்ராக்ட் முதற்கொண்டு எல்லாமே எங்களுக்குக் கிடைக்கிறது’ என்று சொல்கிறார்கள். இதற்குக் காரணம் திமுகவோடு இந்த ஆட்சி வைத்திருக்கும் 60:40 உறவுதான்.

ADVERTISEMENT

இதை மறைப்பதற்காக இன்னொரு அமைச்சர் , ‘திமுகவின் பி டீம் டிடிவி தினகரன்’என்று சொல்கிறார். திமுகவின் பி டீமாக செயல்படுவதே இவர்கள்தான். தப்பித் தவறி திமுக ஆட்சிக்கு வந்தால் இவர்களின் நிலைமை என்னாகும் என்று தெரியும். நமக்கு மடியில் கனமில்லை.

வேனில் ஏறி நின்று வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் அவர் (முதல்வர் எடப்பாடி பழனிசாமியை குறிப்பிடுகிறார்), ‘நமக்கு டெல்லி சப்போர்ட் இருக்கு. நாம இருபது எம்.எல்.ஏ.க்கள் ஜெயித்தால் கூட திமுகவிடம் பேசி வெளியே இருப்பதற்கு பர்மிஷன் வாங்கிக் கொள்ளலாம்’என்று நினைக்கிறார். அதெல்லாம் நடக்குமா?

யார் முதல்வராக வந்தால் தமிழ்நாட்டுக்கு நன்மை என்று மக்கள் தீர்மானிப்பார்கள். உள்ளாட்சித்தேர்தலில் நம்மால்தான் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. ஆர்.கே. நகரில் நடைபெற்றதை தமிழ்நாடு முழுதும் நடத்திக்காட்டும் வலிமை நமக்கு இருக்கிறது என்பதை இந்தத் தேர்தல் உணர்த்தும்.

அம்மாவின் தொண்டர்கள் ஒற்றுமையோடு இருக்க வேண்டுமென்பதற்காகத்தான் நான் சில காலம் அமைதிகாத்து வந்தேன். அம்மாவின் பிறந்தநாள் வரை நாம் நமது மற்ற வேலைகளை பார்ப்போம்.

அம்மாவின் பிறந்தநாளுக்கு பிறகு நாம் யார் என்பதை எல்லாருக்கும் நிரூபிப்போம். திமுக நினைப்பது போல் நாம் ஓட்டுப் பிரிப்பாளர்களாக இருக்க மாட்டோம். தமிழகத்தை ஆர்.கே.நகராக மாற்றுவோம். நம்முன் இரு வேலைகள் இருக்கின்றன. அதிமுகவை மீட்டெடுப்போம், அம்மாவின் உண்மையான ஆட்சியை அமைப்போம். அதிமுகவை மீட்டெடுப்பது தேர்தலுக்கு முன்பா பின்பா என்பதை காலம் தீர்மானிக்கும். தினகரன் யாருக்கும் பயந்து ஒதுங்கிப் போகும் ஆள் கிடையாது. இப்போது தேர்தல் என்னும் பரிட்சைக்குத் தயாராக இருக்கிறோம்”என்று பேசினார் டிடிவி தினகரன்.

**-வேந்தன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share