திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஆகஸ்ட் 16) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திமுகவின் துணைப் பொதுச்செயலாளரான ஆ.ராசா பங்கேற்கவில்லை. அதேநேரத்தில், மாவட்ட செயலாளராக அல்லாத இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூட்டத்தில் பங்கேற்றார்.
ஆ.ராசா பங்கேற்காதது குறித்து நாம் விசாரித்தபோது, “ஆ.ராசா மத்திய இணை அமைச்சராக இருந்தபோது, அவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அவருக்கு தாடை பகுதியில் காயம் ஏற்பட்டது. நீண்ட நாட்களாக அதன் தாக்கம் இருந்து வருகிறது. இந்தநிலையில், சில நாட்களுக்கு முன்பு தாடை பகுதியில் ஏற்பட்ட பல் வலி காரணமாக அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அதனால் மா.செ.க்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை” என்கிறார்கள்.
அதேநேரத்தில், உதயநிதி கலந்து கொண்டது குறித்து திமுக வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, “சேலத்தில் இளைஞரணி மாநாடு முன்னேற்பாட்டு பணிகள் குறித்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் போது இளைஞரணி செயலாளர் என்ற முறையில் மா.செக்கள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
தற்போது, 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு குழுவில் உதயநிதி ஸ்டாலின் இடம்பெற்றுள்ளார். இந்த குழுவில் இடம்பெற்றுள்ள முதன்மை செயலாளர் நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாவட்ட செயலாளர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இயல்பாகவே இடம்பெறுகிறார்கள்.
இந்தநிலையில், மாவட்ட செயலாளராக இல்லாத போதும் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் என்ற அடிப்படையில் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் உதயநிதி கலந்து கொண்டார்” என்று அறிவாலய வட்டாரத்தில் சொல்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மழைநீர் வடிகால் பணிகள்… உதயநிதி ஆய்வு மேற்கொள்வார் : அமைச்சர் பேட்டி!
“தலித் முதலமைச்சராக முடியும்… ஆனால்” : திருமாவுக்கு ராமதாஸ் பதில்!