அனைவரையும் காப்பாற்றும் அரசாக திமுக அரசு செயல்படுகிறது என எளிமையாக மக்களுக்குப் புரியும் வகையில் பரப்புரை மேற்கொள்ள வேண்டும் என மாவட்டச் செயலாளர்களிடம் ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (பிப்ரவரி 23) நடைபெற்றது.
காணொளி காட்சி மூலம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 72 மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், 234 தொகுதி பார்வையாளர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது, தேர்தல் பிரச்சாரம் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அப்போது பேசிய ஸ்டாலின், “வரும் 26ஆம் தேதி கலைஞர் நினைவிடம் திறப்பு விழாவை நிகழ்ச்சி போல் நடத்தவுள்ளோம். இதில் நீங்களும் வந்து கலந்துகொள்ள வேண்டும்.
‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதிவாரியாக நடைபெற்ற கூட்டங்கள் அனைத்தும் பெரும் வெற்றியடைந்துள்ளன. நீங்கள் மிகப் பிரமாண்டமாக நடத்திக் காட்டிவிட்டீர்கள். பெரும்பாலான கூட்டங்களை டிவியில் பார்த்துப் பிரமித்தேன்.
அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே மாதிரியாக மேடை அமைக்கப்பட்டு, எல்.ஈ.டி திரைகளுடன் பிரம்மாண்ட கூட்டங்களாக இருந்தன. மக்கள் நிறைந்து காணப்பட்டார்கள், டாப் ஆங்கிளில் எடுக்கப்பட்ட கூட்ட புகைப்படங்களும் மலைப்பை ஏற்படுத்தியது.
இதனை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த பொறுப்பு அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இக்கூட்டங்கள் பரவலாக மாநிலம் முழுவதும் திமுகவினரை உற்சாகப்படுத்தியிருக்கின்றன. தேர்தல் பணிகளைப் பொறுத்தவரை, நாம் மிக வேகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதியிலும் நாம் தான் முழுமையான வெற்றி பெறுவோம் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அந்த வெற்றி மகத்தானதாக இருக்க வேண்டும். நாம் பெறும் வாக்குகள் அபரிமிதமாக இருக்க வேண்டும்.
நம்முடைய ஒவ்வொரு திட்டம் பற்றியும் படித்துவிட்டு, எளிமையாகப் பரப்புரைச் செய்ய வேண்டும். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரையும் காப்பாற்றும் அரசு, நமது அரசு என எளிமையாகப் புரியும் வகையில் பரப்புரை செய்ய வேண்டும்” என மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக, பிப்ரவரி 26 முதல் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் எனும் வீடு வீடாகச் செல்லும் பரப்புரை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முடிவுக்கு வரும் ஜிமெயில்… அச்சத்தில் பயனர்கள் : உண்மை என்ன?
தேர்தல் ஆணையர் ஆலோசனை : அரசியல் கட்சிகளின் கோரிக்கைகள் என்ன?