திமுக இளைஞரணி செயலாளரும் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுடைய அதிகாரபூர்வ அரசு இல்லமான குறிஞ்சி இல்லத்துக்கு இன்று (பிப்ரவரி 22) ஆம் தேதி மாலை திமுகவின் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் வருமாறு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் இன்று சென்னையில் தான் இருக்கிறார்கள். நாளை காலை காணொளி மூலமாக திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில்தான், திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் உட்பட அனைத்து மாவட்ட செயலாளர்களும் இன்று உதயநிதி ஸ்டாலினின் குறிஞ்சி இல்லத்தில் கூடுகிறார்கள்.
இதுகுறித்து திமுக மாவட்ட செயலாளர்கள் வட்டாரத்தில் விசாரித்தோம்.
” கடந்த ஜனவரி 21 ஆம் தேதி திமுகவின் இளைஞரணி மாநில இரண்டாவது மாநாடு சேலத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு கடுமையாக உழைத்த திமுகவின் இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்களையும் துணை அமைப்பாளர்களையும் ஏற்கனவே குறிஞ்சி இல்லத்துக்கு அழைத்து அவர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்து, பரிசும் கொடுத்து அனுப்பினார் அமைச்சர் உதயநிதி.
அப்போது இது இளைஞரணி மாநாடாக இருந்தாலும் அனைத்து மாவட்ட செயலாளர்களும் கடுமையாக உழைத்து இந்த மாநாட்டை வெற்றி பெற வைத்தோம். ஆனால் இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்களுக்கு மட்டும் பாராட்டும் பரிசும் என்று சில மாவட்ட செயலாளருக்கு இடையிலேயே வருத்தங்கள் பகிரப்பட்டன.
அது மட்டுமல்ல… கடந்த வாரம் ஒவ்வொரு மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகளை அழைத்து தனித்தனியாக ஆலோசனை நடத்தினார் உதயநிதி.
அப்போது தங்களுடைய மாவட்ட செயலாளர்கள் பற்றி இளைஞர் அணி அமைப்பாளர்கள் உதயநிதியிடம் புகார் வாசித்தனர். இதுவும் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்களுக்கு தெரிந்து வருத்தத்தில் இருந்தார்கள்.
இதை உணர்ந்த உதயநிதி இன்று தனது குறிஞ்சி இல்லத்தில் இளைஞர் அணி மாநாடு வெற்றி பெற உழைத்த அனைத்து திமுக மாவட்ட செயலாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் ஒரு விருந்தை ஏற்பாடு செய்திருக்கிறார்.
மாவட்டச் செயலாளர்களை மட்டும் அழைத்தால் அது வேறு வகையாக பேசப்படக் கூடும் என்பதால் பொதுச் செயலாளர் துரைமுருகன் மற்றும் துணைப் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளை அழைத்திருக்கிறார் உதயநிதி.
இளைஞரணி மாநாட்டுக்காக நன்றி தெரிவிக்கும் விதமாக இது இருந்தாலும்… உதயநிதியின் வீட்டில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் ஒன்று கூடுவது திமுகவில் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இந்த விருந்தில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை உள்ளிட நிர்வாகிகளும் கலந்துகொள்கிறார்கள். எனவே கட்சி ரீதியான விவகாரங்களும் இதில் பேசப்படலாம் என்கிறார்கள் குறிஞ்சி வட்டாரத்தில்.
ஏற்கனவே திமுக இளைஞரணி மாநாட்டுக்கு முன்பு அக்கார்டு ஹோட்டலில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்… சிறப்பு அழைப்பாளராக இளைஞரணி செயலாளர் என்ற முறையில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்