நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. தமிழகத்தில் ஆளும்கட்சியான திமுகவை பொறுத்தவரை, தேர்தலை எதிர்கொள்வதற்காக தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு குழுக்களை அமைத்துள்ளது. இந்த மூன்று குழுக்களும் தேர்தல் தொடர்பான பணிகளில் மும்முரமாக பணியாற்றி வருகின்றனர்.
திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. இந்தநிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக இன்று (பிப்ரவரி 23) நடைபெற உள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று காலை 11.30 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.
இக்கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர் தேர்வு, வெற்றி வாய்ப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ் – சம்மர் ஸ்பெஷல்: நீர்ச்சத்துக் குறைபாடு… அலட்சியப்படுத்தாதீர்கள்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!