என்னது வரலாற்றில் முதல் முறையாகவா? மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் தமிழக அரசு சொல்வது உண்மை இல்லை.. திமுக மறுப்பு

Published On:

| By Mathi

DMK Vs TN Govt EB Promotions

”வரலாற்றில் முதல் முறையாக மின்சார வாரியத்தின் (TNEB) 300 பொறியாளர்களுக்கு (Engineers) ஒரே நேரத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது” என தமிழக அரசு தெரிவித்துள்ளதற்கு திமுக மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு சொன்னது என்ன?

தமிழக அரசு நேற்று ஜூன் 6-ந் தேதி வெளியிட்ட அறிக்கையில், “ முதலமைச்சர் விஜய் உத்தரவின்படி, வரலாற்றில் முதல் முறையாக 300 பொறியாளர்களுக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு ஆணைகள் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் வழிகாட்டுதலின்படி வெளிப்படைத்தன்மையுடன் (Transparency) வழங்கப்பட்டதால் மின்வாரிய பொறியாளர்கள் மகிழ்ச்சி.

ADVERTISEMENT

முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் நேர்மையான, ஊழலற்ற மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நிர்வாகத்தின் கீழ் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் வழிகாட்டுதல்களுடன், 2000 முதல் 2002 ஆம் ஆண்டு உதவி பொறியாளர்கள் (மின்னியல்) ஆக பணியில் சேர்ந்தவர்களுக்கு, தகுதியுடைய 379 பொறியாளர்களில் முதற்கட்டமாக 300 உதவி செயற்பொறியாளர்களுக்கு (மின்னியல்) செயற்பொறியாளர் பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பலதரப்பட்ட பொறியாளர்களின் கோரிக்கைகள் மற்றும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு ஏதுவாகவும், நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பதவி உயர்வு விவகாரங்களுக்கு தீர்வு காணும் வகையிலும், தகுதியுடைய பொறியாளர்களுக்கு வெளிப்படையான முறையில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

அதன்படி, வரலாற்றில் முதல் முறையாக இவ்வளவு பெரிய அளவில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டிருப்பது மின்வாரிய வரலாற்றில் முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

திமுக மறுப்பு

ஆனால், இதனை திமுக ஆதாரங்களுடன் மறுத்துள்ளது. திமுக தமது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது: நாள் ஒரு பொய்! பொழுதொரு புளுகு! சோபா மாடல் தவெக ஆட்சியின் பித்தலாட்டம்! உண்மையின் முகம் இதுதான்: TNEB பதவி உயர்வு குளறுபடியும், TN DIPR-ன் பொய் பிம்பமும்!

ADVERTISEMENT

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TNEB) 300 உதவி செயற்பொறியாளர்களுக்கு (AEE) பதவி உயர்வு வழங்கப்பட்டதை, தவெக அரசு “வரலாற்றில் முதன்முறை” என விளம்பரப்படுத்தி வருகிறது. ஆனால், இது திசைதிருப்பும் வேலை!

உண்மையின் பின்னணி இதோ:

  • நீண்டகாலப் போராட்டம்: 2000-2001 ஆம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்த உதவி பொறியாளர்களின் ‘Seniority’ விவகாரம், பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இருந்தது.
  • நீதிமன்றத் தீர்ப்பு: மார்ச் 11, 2026 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, இந்த முட்டுக்கட்டையை உடைத்தது.
  • திமுக அரசின் அதிரடி: தீர்ப்பு வந்த மறுநாளே, மார்ச் 12, 2026 அன்று, அப்போதைய திமுக அரசு 416 உதவி செயற்பொறியாளர்களை (AEE) செயற்பொறியாளர் (EE) பதவி உயர்விற்குப் பரிசீலிக்கப் பட்டியலிட்டது.
  • இந்த 416 பேர் அடங்கிய அதிகாரப்பூர்வ ஆவணமே இதோ இணைக்கப்பட்டுள்ளது!

  • இப்போது எழும் கேள்வி? தேர்தல் நடத்தை விதிமுறைகளால் நிறுத்தி வைக்கப்பட்ட இந்த செயல்முறையை, தற்போது தவெக அரசு தொடர்ந்தது சரி. ஆனால், தகுதி வாய்ந்த 416 பேரில், ஏன் 300 பேருக்கு மட்டும் தற்போது பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது?
  • மீதமுள்ள 116 AEE-களுக்கு என்ன ஆனது? அவர்கள் தகுதியற்றவர்களா? அல்லது அவர்களைப் பழிவாங்கும் நோக்கம் ஏதேனும் உள்ளதா?
  • செய்திகளைத் திரித்து, திரைப் பட விளம்பர நிறுவனம் போலச் செயல்படும் TN DIPR, இந்த 116 பேரின் நிலை குறித்து மௌனம் காப்பது ஏன்?
  • தகுதியுள்ள அனைவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே பொறியாளர்களின் நியாயமான எதிர்பார்ப்பு. உண்மையை மறைத்து மாயை உருவாக்கும் முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
  • 300 தான் அதிகமா என்றால் இல்லை 700 மேற்பட்ட பதவி உயர்வு வழங்கப்பட்ட வரலாறு உண்டு [28.01.2024 & 21.08.2025 G.O]

குறிப்பு: மார்ச் 2026-ல் திமுக அரசு 416 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது.

தற்போது ஜூன் 6, 2026-ல் 300 பேருக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 116 பொறியாளர்களின் நிலை குறித்த தெளிவான விளக்கம் அரசுத் தரப்பில் இல்லை. இவ்வாறு திமுக தெரிவித்துள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share