முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில், திமுகவில் உள்ள 22 அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 14-ஆம் தேதி திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் இந்த போட்டிகளை தொடங்கி வைத்தார். Dmk cricket competition held
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “2026 சட்டமன்ற டோர்னமென்ட் நமக்கு மிக மிக முக்கியமானது. நமக்கு எதிரே பல அணிகள் இருக்கலாம். புதிதாக அணிகள் உருவாகலாம். ஆனால், வெற்றி பெற்று கோப்பையை வெல்லப் போவது நம்முடைய தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அணி தான்.

ஒரு போட்டி என்றால் அதற்கான் முன் தயாரிப்பு, உடற்பயிற்சி மிகவும் அவசியம். அப்போது தான் நாம் அந்த போட்டியில் வெற்றி பெற முடியும். அதேபோல தான் 2026 சட்டமன்ற தேர்தலுக்கும் நாம் இப்போதே பயிற்சியில் ஈடுபட வேண்டும்” என்று அனைவரையும் உற்சாகப்படுத்தி பேசினார்.
முதல் நாளான நேற்று (பிப்ரவரி 15) பொறியாளர் அணி, அயலக அணி, தலைமைக்கழக அணி, எம்.எல்.ஏ-க்கள் அணி, மீனவர் அணி, சுற்றுச்சூழல் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, மாணவர் அணி உள்ளிட்ட 18 அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை மெரினா கண்ணகி சிலை எதிரே உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில், பள்ளி கல்வித்துறை அன்பில் மகேஷ் தலைமையிலான எம்.எல்.ஏ-க்கள் அணியும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் தலைமையிலான தலைமை கழக அணியும் மோதின.

இந்த போட்டியில் தலைமை கழக அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 22 பந்துகளில் 41 ரன்கள் அடித்து தலைமை கழக அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்த அருண் நேரு எம்.பி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் செயலாளரும் எம்.பி-யுமான தயாநிதி மாறன் ஆட்ட நாயகன் விருது வழங்கினார்.

இன்று நடைபெறும் இரண்டாவது நாள் போட்டியில் சென்னை மேயர் பிரியா தலைமையிலான பெண்கள் அணி உள்ளிட்ட நான்கு அணிகள் விளையாடுகின்றனர். வெற்றி பெறும் அணிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை பரிசுகள் வழங்குகிறார். முதல் பரிசாக ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரம் வழங்கப்படுகிறது. Dmk cricket competition held