இந்தத் தொகுதிகளை வச்சிக்கங்க… இந்தத் தொகுதிகளைக் கொடுங்க… திமுக-காங்கிரஸ் கசமுசா!

Published On:

| By Aara

dmk congress seats and candidates

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் ஒன்பது, புதுச்சேரி ஒன்று என பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில்… இவற்றில் ஏற்கனவே போட்டியிட்ட தொகுதிகளிலேயே மீண்டும் காங்கிரஸ் போட்டியிடுகிறதா அல்லது தொகுதிகள் மாற்றப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து திமுக காங்கிரஸ் கூட்டணி வட்டாரங்களில் விசாரித்தோம்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே காங்கிரஸ் போட்டியிட்ட ஒன்பது தொகுதிகளில் சில மாற்றங்கள் இருக்கின்றன என்கிறார்கள்.

2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி திருச்சி, கரூர், ஆரணி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி, தேனி ஆகிய 9 தொகுதிகளில் தமிழ்நாட்டில் போட்டியிட்டது.

dmk congress seats and candidates

இவற்றில் இப்போது திருச்சி, ஆரணி, தேனி ஆகிய மூன்று தொகுதிகளை காங்கிரஸ் கட்சி போட்டியிடாமல்  திமுகவிடம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. தேனி தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவன் தோல்வியடைந்தார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணி தோல்வியடைந்த ஒரே ஒரு இடம் தேனி தான். இந்த வகையில் தேனியை தற்போது திமுக தன் வசமாக்கி இருக்கிறது என்கிறார்கள்.

அதேபோல ஆரணி தொகுதி காங்கிரஸ் எம்பி விஷ்ணு பிரசாத் மீது அவர்களது கட்சிக்குள்ளேயே அதிருப்தி நிலவுவதால் அந்த தொகுதியையும் திமுக தன் வசம் எடுத்துக் கொள்கிறது.

திருநாவுக்கரசர் எம் பி ஆக இருக்கும் திருச்சி தொகுதியில் தற்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதனால் அந்த தொகுதியும் காங்கிரஸுக்கு இல்லை என்பது தான் இப்போதைய நிலவரம்.

இந்த மூன்று தொகுதிகளுக்கு பதிலாக ஈரோடு, கடலூர், மயிலாடுதுறை ஆகிய தொகுதிகள் புதிதாக காங்கிரஸுக்கு ஒதுக்கப்படலாம் என்கிறார்கள் திமுக வட்டாரங்களில்.

dmk congress seats and candidates

மேலும்… திருவள்ளூர், கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி இந்த முறை தனது வேட்பாளர்களை மாற்ற வேண்டும் அல்லது அதை திமுகவிடம் ஒப்படைக்க வேண்டும் என திமுக தரப்பில் வலியுறுத்தி வருவதாக தெரிகிறது.

கரூர் எம்.பி.யான ஜோதிமணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவதில் தற்போது சிறையில் இருக்கும் கரூர் மாசெவும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜிக்கு முற்றிலும் விருப்பமில்லை என்கிறார்கள். அதே போல கிருஷ்ணகிரி தொகுதி எம்பி ஆக இருக்கும் டாக்டர் செல்லகுமார் மீது திமுக தலைமையே சற்று வருத்தத்தில் இருப்பதாகவும் கூறுகிறார்கள். திருவள்ளூர் எம்பி யாக இருக்கும் ஜெயக்குமார் தொகுதியில் அதிருப்தியை எதிர்கொண்டு வருவதாக திமுகவுக்கு ரிப்போர்ட் சென்று இருக்கிறது.

இதன் அடிப்படையில் தான் இந்த மூன்று தொகுதிகளிலும் வேட்பாளர்களை மாற்றுமாறும் அல்லது அந்த தொகுதிகளை திமுகவுக்கு கொடுத்துவிட்டு வேறு தொகுதிகளை பெற்றுக் கொள்ளுமாறும் காங்கிரஸ் கட்சியிடம் திமுக கேட்டுள்ளது. ஆனால்… டாக்டர் செல்லகுமார், ஜோதிமணி, ஜெயக்குமார் இந்த மூவருமே டெல்லியில் தேசிய காங்கிரஸ் தலைமையோடு மிகவும் நெருக்கமானவர்கள். எனவே அவர்களுக்கான சீட் விவகாரம் திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே நெருடலை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறார்கள்.

இது தவிர சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், கன்னியாகுமரியில் விஜய் வசந்த், விருதுநகரில் மாணிக் தாகூர் ஆகியோர் மீண்டும் தத்தமது தொகுதிகளை எளிதாகப் பெறுகிறார்கள்.

இதுதான் திமுக -காங்கிரஸ் தொகுதிகள் பிரித்துக் கொள்வதில் இன்றைய நிலவரம்!

வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

WPL 2024: உ.பி-யை வீழ்த்திய குஜராத்.. RCB அணிக்கு வாய்ப்பு இருக்கா?

மகளிர் உரிமைத் தொகை பிச்சையா? குவியும் கண்டனம்- குஷ்பு விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share