கீழடி அகழாய்வு… ஆதாரம் போதவில்லையா? – மத்திய அமைச்சரை விளாசிய திமுக, காங்கிரஸ்!

Published On:

| By Selvam

கீழடி அகழாய்வு முடிவுகளை அங்கீகரிக்க இன்னும் அறிவியல்பூர்வமான ஆய்வுகள் தேவை என்று மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் இன்று (ஜூன் 10) பேசியதற்கு திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் சிவகங்கை மாவட்டம் கீழடியில் இந்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. இதுதொடர்பான கடந்த 2023-ஆம் ஆண்டு 982 பக்க ஆய்வறிக்கையை தொல்லியல் துறை நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணன், இந்திய தொல்லியல் துறை இயக்குனரிடம் சமர்ப்பித்தார். dmk congress condemned Gajendra Singh Shekhawat

அமர்நாத் ராமகிருஷ்ணனின் கீழடி ஆய்வறிக்கையை, இந்திய தொல்லியல் துறை திருப்பி அனுப்பியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

இந்தநிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் இதுதொடர்பாக கூறும்போது,

“கீழடி அகழாய்வு முடிவுகளை அங்கீகரிக்க இன்னும் அறிவியல்பூர்வமான ஆய்வுகள் தேவை. அறிவியல் பூர்வமான முடிவுகள் வந்த பிறகே அங்கீகரிக்க முடியும். அகழாய்வு பணிகளுக்கு அமர்த்தப்படுபவர்கள் பிராந்திய உணர்வுகளை தூண்டி விடுகின்றனர். தொல்லியல் துறையில் அரசியல்வாதிகள் தலையிட முடியாது” என்று தெரிவித்தார்.

மத்திய அமைச்சரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, சிபிஎம் எம்.பி சு.வெங்கடேசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “ஆய்வறிக்கையின் இரண்டு கட்ட அகழ்வாய்வின் அறிக்கையை வேண்டுமென்றே காலம் தாழ்த்தி, பின் போதிய ஆவணங்கள் இல்லை என்று கூறுவது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல.

ஆரம்பத்தில் இந்திய தொல்லியல் துறை நடத்திய இரண்டு அகழாய்வுகளிலும் 88 கரிம பொருட்கள் கிடைத்தன.

இவற்றில் 18 கரிமப் பொருட்கள் ஃப்ளோரிடாவில் உள்ள பீட்டா அனலிடிகள் லெபோரட்டரியில் ஏஎம்எஸ் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 5 கரிமப் பொருட்கள் புது டெல்லியில் உள்ள இன்டர் யுனிவர்சிடி அக்சலரேட்டர் சென்டரில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

எத்தனை அறிவியல்பூர்வ ஆய்வுகள் நடத்தினாலும், ஒன்றிய அரசு, அதை ஏற்றுக்கொள்ளாமல் காலம் தாழ்த்துவது உள்நோக்கம் கொண்ட செயலாகும். உடனடியாக கீழடி ஆய்வறிக்கை ஒன்றிய அரசு வெளியிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தங்கம் தென்னரசு, “முதலில் அவர்கள் கீழடியில் ஒன்றுமே இல்லை என்றார்கள். அடுத்து ஆய்வதிகாரியை இடம் மாற்றினார்கள். அப்புறம் இனிமேல் நிதியே ஒதுக்க மாட்டோம் என்றார்கள். கடைசியாக, சமர்ப்பித்த அறிக்கையை இரண்டாண்டுகள் கிடப்பில் போட்டார்கள்.

இப்போது வந்து ஆதாரம் போதவில்லை என்கிறார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் தமிழர்களின் வரலாற்றை நிராகரிப்பது பொதுவாக இருக்கிறது. கண்டுபிடிக்கும் காரணங்கள் தான் வேறு வேறாக இருக்கிறது.

5,350 ஆண்டுகள் பழமையானவர்கள். தொழில்நுட்பம் கொண்டவர்கள். மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள் என்றெல்லாம் உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக்கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசு ஒப்புக்கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்?

தமிழர்களை எப்போதும் இரண்டாந்தரக் குடிமக்களாக வைத்திருக்க வேண்டும் என்ற தணியாத தாகத்தாலா? மறந்து விடாதீர்கள். வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது. அவை மக்களுக்கானவை. மக்களிடமே சென்று சேரும். பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன?” என்று விமர்சித்துள்ளார்.

மதுரை சிபிஎம் எம்.பி சு.வெங்கடேசன்,“இந்திய மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழி சமஸ்கிருதம்” என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் சொன்ன போது “அறிவியல் ஆதாரம் என்ன?” என்று நாங்கள் கேட்கவில்லை.

ஏனென்றால் அப்படி எந்த ஆய்வும் நடைபெறவில்லை. கீழடியின் வரலாறு குறித்து அறிவியல் பூர்வமான நிறுவனங்களால் ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை சமர்பிக்கப்பட்டிருக்கிறது.

“அதிகமான அறிவியல் பூர்வமான முடிவுகள் தேவை. அப்பொழுது தான் அங்கீகரிக்க முடியும்” என்று அமைச்சர் சொல்கிறார். கீழடியில் கிடைத்த மாடுகளின் எலும்புகள் ஆய்வுக்கு உட்படுத்த பட்டிருக்கிறது. ஆனால் அந்த மாட்டு கோமியம் இப்பொழுது கிடைக்க வாய்ப்பில்லையாதலால் கூடுதல் ஆய்வுக்கு வாய்ப்பில்லை அமைச்சரே” என்று தெரிவித்துள்ளார். dmk congress condemned Gajendra Singh Shekhawat


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share