ைஃபை ஆன் செய்ததும் ஆன் லைன் வந்த இன்ஸ்டாகிராம் மாமல்லபுரத்தில் நடந்த இரு நாள் காங்கிரஸ் சிந்தனை அமர்வு படங்களை அனுப்பியது.
அந்தப் படங்களைப் பார்த்து ஸ்மைலிகளை வெளியிட்ட வாட்ஸ் அப் தனது செய்தியை டைப் செய்யத் தொடங்கியது.
“தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு மாமல்லபுரத்தில் ஜூன் 6, 7 தேதிகளில் நடைபெற்றது. இதன் முடிவில் நேற்று (ஜூன் 7) மாலை செய்தியாளர்களை சந்தித்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி. பாஜகவை எதிர்த்து தமிழக காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தவரிடம், சிந்தனை அமர்வு பயிற்சி முகாமின் தீர்மானங்கள் என்னென்ன என்று கேட்டார்கள் பத்திரிகையாளர்கள். பொதுவாகவே இதுபோல அரசியல் கட்சிகள் நடத்தும் முகாம்கள் முடிந்ததும் தீர்மான நகல்கள் பத்திரிகைகளுக்கு வழங்கப்படும். அந்த வகையில் இந்த சிந்தனை அமர்வின் தீர்மானங்கள் பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டபோது, மாநில தலைவர் அழகிரி, ‘தீர்மானங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இன்னும் இரண்டு, மூன்று மணி நேரங்களில் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்’ என்று கூறினார். ஆனால் நேற்று இரவு வரை மாமல்லபுரம் சிந்தனை அமர்வு தீர்மானங்கள் வெளியிடப்படவில்லை.
தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி கடந்த மாதம் ராஜஸ்தான் மாநில உதயப்பூரில் சிந்தனை அமர்வு நடத்தி அதன் அடிப்படையிலான கொள்கைப் பிரகடனம் வெளியிட்டது. ஆனால் அந்த அடிப்படையில் தமிழக காங்கிரஸ் கட்சி மாமல்லபுரம் பிரகடனம் வெளியிடாதது ஏன்? இரு நாட்கள் நடந்த சிந்தனை அமர்வில் பங்கேற்ற நிர்வாகிகளுக்கும் அமர்வை நடத்திய தலைவர்களுக்கும் அரசியல் விவகாரத்தில் குறிப்பாக கூட்டணி விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்தான் தீர்மானங்கள் திடீரென நிறுத்தப்பட்டதாக கூறுகிறார்கள் அமர்வில் கலந்துகொண்டவர்கள்.
சிந்தனை அமர்வில் அரசியல் அமர்வு எம்.பி. ஜெயக்குமார் தலைமையிலும், மகளிர் சமூக நல அமர்வு விஜயதாரணி தலைமையிலும், பொருளாதார அமர்வு விஷ்ணு பிரசாத் தலைமையிலும், விவசாய அமர்வு மயூரா ஜெயக்குமார் தலைமையிலும் நடைபெற்றது. ஒவ்வொரு அமர்விலும் ஒருங்கிணைப்பாளர்கள், காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர்கள், மாநில செயலாளர்கள் மாவட்டச் செயலாளர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு கலந்துகொண்டார்கள்.’ காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மாநில தலைவர் அழகிரி, திருநாவுக்கரசர், தங்கபாலு ஸ்ரீவல்ல பிரசாத், சுதர்சன நாச்சியப்பன், ஆகியோர் ஒவ்வொரு அமர்வுக்கும் விசிட்டிங் ஃப்ரொபசர் போல சென்று அந்த அமர்வின் தலைவரோடும் உறுப்பினர்களோடும் கொஞ்ச நேரம் பேசினார்கள்.

இந்த நான்கு அமர்வுகளுமே ஒவ்வொரு முக்கியத்துவம் வாய்ந்த பெரும் சப்ஜெக்ட்டுகளை விவாதித்தனர் என்றாலும் அனைத்து அமர்வுகளிலும் அனைவரும் அரசியலை பேசினார்கள். உட்கட்சி அரசியல், கூட்டணி அரசியல் ஆகியவற்றை அமர்வில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் பேசினார்கள். ஆனால் விஜயதாரணி தலைமை வகித்த அமர்வில், ‘உட்கட்சி அரசியல் பற்றியோ கூட்டணி அரசியல் பற்றியோ இங்கே பேசாதீர்கள்’ என்று உடனடியாக தடை போட்டுவிட்டார்.
அரசியல் அமர்வில் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினர் காங்கிரஸுக்கு செய்த உள்ளடி வேலைகளை எல்லாருமே குறிப்பிட்டுப் பேசினார்கள். மேலும் பாஜகவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தவும் ஆலோசனை நடத்தினார்கள். மாவட்டங்கள் தோறும் ஆர்பாட்டம் நடத்த வேண்டும் என்று பேசினார்கள். திமுக கூட்டணிக்கு எதிராகவும் பல நிர்வாகிகள் பேசினார்கள். அரசியல் அமர்வுக்கு இணையாக பொருளாதார அமர்விலும் அரசியல் தீவிரமாக பேசப்பட்டது. பொருளாதார அமர்வுக்கு தங்கபாலு சென்றபோது திமுகவுடனான கூட்டணி பற்றி காரசாரமாக விவாதம் நடந்துகொண்டிருந்தது. அந்த அமர்வில் இருந்த 36 பேரில் 35க்கும் மேற்பட்டோர் திமுகவோடு கூட்டணி வைத்து நாம் என்ன கண்டோம் என்று வெளிப்படையாகவே கேட்டனர். இதைக் கேட்ட தங்கபாலு, ’நம் தலைவர் ராகுல் காந்தியை முதன் முதலில் பிரதமர் வேட்பாளர் என சொன்னது திமுக தலைவர் ஸ்டாலின் தானே?” என்று பதில் அளித்தார். அப்போது எழுந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜி.கே.முரளிதரன், ‘இதையே எத்தனை நாட்கள் சொல்லிக் கொண்டிருப்போம்? ராகுலை பிரதமர் வேட்பாளர் என்று சொல்லி 23 எம்பிக்களை ஜெயித்து இன்று நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிறார். ராகுல் காந்தியை பிரதமராக்குவோம் என்று அவர் மனதார சொல்லியிருந்தார் என்றால் மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு 25 இடங்கள், திமுகவுக்கு 15 இடங்கள் என நிற்கவேண்டியதுதானே? ‘ என்று கேட்டதற்கு தங்கபாலு சிரித்துவிட்டார்.

அப்போது பேரறிவாளன் விவகாரம் பற்றியும் பலர் காரசாரமாக பேசினார்கள். மாநில செயலாளர் முனீஸ்வர் கணேசன் போன்றோரும் பேரறிவாளன் விவகாரம் பற்றி கடுமையாக பேசினார்கள். தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் முத்தழகன் திமுகவுக்கு எதிராக பொங்கித் தீர்த்துவிட்டார். ‘திமுகவும் பாஜகவும் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் வெளியே அடித்துக் கொள்கிறார்கள். ஆனால் உள்ளுக்குள் ஒன்றோடொன்று கலந்துகொண்டிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்.சின் ஊர்வலத்தை ஒரு நாள் திமுக அமைச்சர்களில் யாராவது ஒருவர் கொடியசைத்து துவக்கி வைக்கத்தான் போகிறார். அதுவரைக்கும் நீங்கள் திமுகவை சுமந்துகொண்டுதான் இருப்பீர்களா? பேரறிவாளனை ஸ்டாலின் கட்டிபிடித்தபோதே நாம் வெளியே வந்திருக்க வேண்டும்’ என்றார். இன்னொரு மாவட்ட தலைவர் பேசுகையில், ‘ ராஜீவ் காந்தி தானே சார் நமது முகம், காங்கிரஸ் கட்சியின் முகம். அந்த முகத்திலேயே அவர்கள் அடிக்கும்போது நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? ’ என்று கேட்க அனைவரும் ஆதரித்து குரல் எழுப்பினார்கள். அப்போது விஷ்ணுபிரசாத், ‘உங்க கருத்துகளை எல்லாம் பதிவு செய்துகொண்டோம். தீர்மானமாக எழுதி தலைவரிடம் கொடுத்துவிடுவோம்’ என்று பதிலளித்தார்.
மாலை 4 மணி சுமாருக்கு ராஜ்யசபா உறுப்பினரும் காங்கிரஸ் காரிய கமிட்டி சிறப்பு அழைப்பாளருமான ப.சிதம்பரம் மாமல்லபுரம் ரிசார்ட்டுக்கு வந்தார். தீர்மானங்கள் என்னென்ன என்றும் மாமல்லபுரம் பிரகடனம் என்று எதை வெளியிடுவது என்றும் அனைத்து அமர்வுகளின் தலைவர்கள், மாநிலத் தலைவர் அழகிரி, மற்ற தலைவர்கள், மேலிடப் பொறுப்பாளர்கள் ஆகியோரோடு ஆலோசித்தார். அமர்வுகளின் தலைவர்கள் கொடுத்தவற்றில் திமுக கூட்டணிக்கு எதிரான மனநிலையில் முக்கால்வாசி நிர்வாகிகள் இருப்பதையும், ராஜீவ் காந்தி கொலையாளி பேரறிவாளன் விவகாரத்தில் தமிழக முதல்வரின் செயல்பாடுக்கு கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதும் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதையெல்லாம் பார்த்த சிதம்பரம், , ‘நமக்கு லாங் டேர்ம் கோல், ஷார்ட் டெர்ம் கோல் என இரு நோக்கங்கள் இருக்கலாம். லாங் டேர்ம் கோல் என்பது இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும். அதற்கு திமுக கூட்டணி அவசியம். இதுமாதிரி பேசுறவங்க ஷார்ட் டேர்ம் கோல் பத்தியே பேசறாங்க. அதனால நமக்கு எந்த பயனும் இல்லை.

அதனால தீர்மானமெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்’ என்று சொல்லிவிட்டார். பொருளாதாரம், அரசியல், விவசாயம், மகளிர் நலம், சமூக நீதி என ஒவ்வொரு துறையிலும் நல்ல கருத்துகள் சொல்லப்பட்டிருந்தாலும் அரசியல்தான் முகமாக இருக்க வேண்டும். அரசியல் ரீதியாக பெரும்பாலான நிர்வாகிகள் திமுக கூட்டணிக்கு எதிராக கருத்து தெரிவித்தார்கள்.. அதற்கு மாறாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மாமல்லபுரம் சிந்தனை அமர்விலேயே எதிர்ப்புகள் ஏற்பட்டு அது சலசலப்பாகி கட்சியில் ஒற்றுமை இல்லாத சூழல் வெளிப்பட்டுவிடுமே என்பதால் தீர்மானங்களை அப்படியே வைத்துவிட்டார்கள். நேற்று மாமல்லபுரம் பிரகடனம் அறிவிக்கப்படாமலேயே இரு நாட்கள் பயிற்சி முகாமை போராடி நடத்தி முடித்துள்ளது காங்கிரஸ்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் சென்றது வாட்ஸ் அப்.
