தமிழகத்தில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் சோதனை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று (ஏப்ரல் 7) புகாரளித்துள்ளார்.
சென்னை எழும்பூரிலிருந்து நேற்று (ஏப்ரல் 6) இரவு சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கமான பெருமாள், சதிஷ், நவீன் ஆகிய மூவரும் ரூ.4 கோடி எடுத்து சென்ற நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் அவர்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஹோட்டல் மற்றும் சாலிகிராமத்தில் உள்ள அவரது உறவினர் முருகன் ஆகியோரது வீடுகளில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்துள்ளார்.
அதில், “நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.4 கோடி பணமானது நெல்லை தொகுதி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக எடுத்துச்செல்லப்பட்டதாக தெரிகிறது.
வாக்காளர்களுக்கு கொடுக்க மேலும் பல இடங்களில் நயினார் நாகேந்திரன் பணத்தை பதுக்கி வைத்திருக்கலாம். இதுகுறித்து தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்தி நயினார் நாகேந்திரன் தொடர்புடைய இடங்களில் உடனடியாக சோதனை நடத்த வேண்டும்.
மேலும், தமிழ்நாட்டில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் பண விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, அந்த தொகுதிகளில், சோதனை நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Good Bad Ugly: இணைந்த தெலுங்கு நடிகர்… ஷூட்டிங் எப்போன்னு பாருங்க!
புதுச்சேரியில் அதிமுக சிம்ப்ளி வேஸ்ட்… ரங்கசாமி டம்மி: ஸ்டாலின் தாக்கு!